இந்தியா
வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்கள் புறக்கணிப்பு: ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க போராட்டம் அறிவிப்பு

வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்கள் புறக்கணிப்பு: ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்குகிறது. ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தரமான மருத்துவம், இலவச மருந்துகள் போன்ற சேவைகளை பெறுவதற்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜிப்மர் நிர்வாகம், தற்போதைய ஒன்றிய அரசின் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை பின்பற்ற தொடங்கியதன் காரணமாக மருத்துவ சேவையில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி தரமான சிகிச்சைகள் பெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளது. படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம், இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவை தற்போது கட்டணமாக மாற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களை விழிபிதுங்கி நிற்க செய்துள்ளது.‘சி’ பிரிவில் எடுக்க வேண்டிய பணியாட்களை ஒப்பந்த முறையில் கொடுத்து லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற, ஜிப்மரின் தன்னிச்சையான செயல்களால் பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்கள், மருத்துவ சேவையில் பிற மாநில மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக ஜிப்மர் நிர்வாகம் கொண்டு வந்த பயனாளர் சிகிச்சை கட்டண முறையை ரத்து செய்து மக்களின் சுகாதார உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும், கட்டாய இந்தி திணிப்புகள் மற்றும் ஜிப்மர் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் 2023–ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது.இதையடுத்து அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்து பாராசிட்டமால் போன்ற அவசிய தேவைக்கு உண்டான மாத்திரைகள் கூட நோயாளிகளுக்கு கொடுக்க இருப்பு இல்லை என்பதும், கட்டணம் பெற்று மருத்துவ சிகிச்சை நடைபெறுவதையும் உறுதி செய்தார். பின்னர் சிறிது காலம் கண்துடைப்புக்காக கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல் ஒவ்வொரு சிகிச்சைக்கு என்று கட்டணம் நிர்ணயித்து மருத்துவம் பார்க்கப்படுகிறது.அதுவும் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு மட்டும் மருத்துவமும், மருந்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காப்பீடு இல்லாமல் வரும் ஏழை நோயாளிகளுக்கு வெளியில் மருந்து வாங்கிக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது. பிரசவத்திற்கு வரும் பெண்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மேலும் நோயாளிகள் மருந்துகள் வாங்க மணிக்கணக்கில் காத்திருந்து வாங்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். மீண்டும் இலவச மருத்துவ சேவை சிறப்பாக தொடர வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் விருப்பம்.அதேபோல், ஜிப்மர் மருத்துவமனையில் பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு செவிலியர் பணியிடம் புதுச்சேரி ஜிப்மரில் 446 இடங்களுக்கும், ஏனாம் ஜிப்மர் கிளையில் 8 இடங்களுக்கும் என 454 செவிலியர் பணியிடங்களுக்கு 22.07.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை புறக்கணிப்பு செய்யும் விதமாக தன்னாட்சி பெற்ற ஜிப்மர் நிர்வாகம், காலிப்பணியிடங்களை நிரப்ப சுயமாக தேர்வுகளை நடத்த முடியாமல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து நுழைவுத் தேர்வு நடத்துவது இதுவே முதல்முறை. ஜிப்மர் தேர்வுகளை நடத்திய போது உள்ளூர் மக்கள் பல்வேறு பணியிடங்களில் நல்ல ஊதியத்துடன் பணியில் உள்ளனர். ஆனால், தற்போது செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் குரூப் ‘பி’ &’சி’ தேர்வுகளுக்கு புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூலம் Common Recruitment Examination (CRE) என்ற தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளை நடத்தி புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்களுக்கு அள்ளித்தரும் வாய்ப்பை கொல்லைப்புறமாக உருவாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 19 எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறார்கள்.இதனால் செவிலியர்கள் மற்றும் குரூப் பி & சி ஊழியர்கள் உள்ளூர் மொழி, கலாச்சாரம் தெரியாமல் மேலும் நோயாளிகளை அலைக்கழிக்கும் நிலை தான் ஏற்படும் சூழல் வரும். ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கு சிறப்பு வயது தளர்வு, காலிப்பணியிடங்கள் மற்றும் பொதுத்தேர்வுகளில் (இருமொழி)- ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்ற புதுச்சேரி இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் உள்ள செவிலியர்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வில்லை. ஆனால் அதைச் செய்யாமல் ஜிப்மர் நிர்வாகம் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது. இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.கடந்த ஆண்டு ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி, தொழில் சிகிச்சை நிபுணர், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 169 ‘பி’ குரூப் பதவிகளுக்கும், டெக்னீசியன், மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 209 ‘சி’ குரூப் பதவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான தேர்வை ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரியில் நடத்திய நிலையில், தற்போது செவிலியர் பணிக்கான தேர்வை (Nursing Officer Recruitment Common Eligibility Test) எய்ம்ஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன?. மண்ணின் மைந்தர்களை புறந்தள்ளி வட மாநிலத்தவர்களை தேர்வு செய்வதற்கான ஒன்றிய அரசின் கொள்கையை ஜிப்மர் திணிக்க முற்படுவது அம்பலமாகிறது. அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜிப்மர் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு புதுச்சேரி மாநிலம் தனது இடம், நீர், மின்சாரம் உள்ளிட்ட வளங்களை எல்லாம் வழங்கி பங்களிப்பை தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகிறது. தற்போது கூட சேதுராப்பட்டு கரசூரில் தொழில் வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து 150 ஏக்கர் ஜிப்மர் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வு மற்றும் வேலைவாய்ப்பில் அக்கறை காட்டாமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜிப்மர் நிர்வாகம் மண்ணின் மைந்தர்களை பாதிக்கின்ற தன்னிச்சையான செயலை திரும்ப பெற வேண்டும்.ஜிப்மர் நிர்வாக வேலை வாய்ப்பளிக்கும் தேர்வை ஜிப்மர் நிர்வாகமே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள செவிலியர் மற்றும் குரூப் பி & சி பணியிடங்கள், புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி மக்கள் துணையோடு வருகிற 8–ஆம் தேதி மாபெரும் பெருந்திரள் மக்கள் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி