இலங்கை
இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண்

இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண்
இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்றப் பணியக ஊழியர் ஒருவர் மீது, விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது பெண் பயணியை தன்னுடன் விடுதிக்கு வருமாறு தொந்தரவு கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விமான நிறுத்தத்தின் போது, இலங்கை யுவதியை முனையத்தை விட்டு வெளியேறி தன்னுடன் விடுதிக்கு வருமாறு பலமுறை அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 3 ஆம் திகதி மாலை 5 மணியளவில் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் இளங்கலை இசைப் பட்டம் பயின்று வரும் 24 வயது இலங்கைப் பெண், கொழும்பிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1182 மூலம் சென்றபோது இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
மாலை 4.30 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் சென்ற இலங்கை யுவதி , ராய்ப்பூருக்கு தனது அடுத்த விமானத்திற்கு காத்திருந்துள்ளார்.
அவர் 16 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்ததால் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு, குடியேற்றப் படிவத்தில் தனது விவரங்களை நிரப்பி, குடியேற்ற கவுண்டரில் உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது விமான நிலையத்தில் தனியாக இருக்கிறீர்களா என அதிகாரி யுவதியிடன் கேட்டதுடதுன், அவரது எண்ணைக் கொடுத்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவரை அழைக்குமாறு கூறியதாக யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மாலை 6.22 மணிக்கு, யுவதி விமான நிலையத்தில் காத்திருந்தபோது, குடியேற்ற அதிகாரி யுவதியை அழைத்து கார் நிறுத்துமிடத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதோடு நகரத்தை சுற்றிக் காண்பிப்பதாகவும், பெண்ணின் உடமைகளை அவரது அலுவலகத்தில் வைத்துவிட்டுச் செல்லுமாறும் வலியுறுத்தினார்.
இரவு உணவிற்கு அழைத்துச் செல்வதாக அதிகாரி கூறியபோது பெண் மறுப்பு தெரிவித்ததால் , தொடர்ந்து போன் செய்து, ஓய்வெடுக்க ஒரு அறைக்குச் செல்லலாம் என்றும் வற்புறுத்தியதாக இலங்கை யுவதி கூறியுள்ளார்.
அதிகாரியில் இந்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சம்பவம் தொடர்பில் நண்பரிடம் கூறியபோது அந்த நண்பர் விமான நிலைய போலீஸை அணுகுமாறு அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் திங்கட்கிழமை அதிகாலையில் ராஜீவ்காந்தி விமான நிலைய போலீஸில் எழுத்துப்பூர்வமாக இலங்கை யுவதி முறைப்பாடு அளித்தார்.
யுவதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 78(1)(i) (பின்தொடர்தல்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் எண்ணின் அடிப்படையில், அவர் விமான நிலையத்தில் பணிபுரியும் குடியேற்றப் பணியக ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாங்கள் ஆதாரங்களைச் சேகரித்து குற்றச்சாட்டுகளைச் சரிபார்த்து வருகிறோம்.
சட்ட நடைமுறைகளின்படி விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.