இலங்கை
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது-
இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது. இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார்.