இலங்கை
கெஹலியவின் குடும்பத்தார் மீது குவியும் குற்றச்சாட்டுக்கள்

கெஹலியவின் குடும்பத்தார் மீது குவியும் குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தார் மீது பண மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கும்பத்தாரின் பண மோசடி தொடர்பான வங்கி ஆவணங்களில் போடப்பட்டுள்ள சுமார் 1,000 கையொப்பம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுமார் 98 மில்லியன் ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக வருமானமாக ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த செயல் பணமோசடி தடுப்பு சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை தொடர்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டிய தேவையான ஆவணங்கள் என்ன என்பதைக் குறிப்பிடும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதி வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களின் ஆயுள் காப்பீடு மற்றும் ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் பெயரில் உள்ள தலா 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான தலா 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று வங்கிக் கணக்குகளும் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாக கிடைத்த தகவல் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.
கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி, மகள்மார்களான அமலி ரம்புக்வெல்ல, நயனிகா ரம்புக்வெல்ல, சந்துல ரம்புக்வெல்ல மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி பண்டார ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் சுமார் 97.35 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமாகப் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.