இலங்கை
செம்மணிப் புதைகுழியில் சர்வதேசத் தலையீட்டை அனுமதிக்கப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

செம்மணிப் புதைகுழியில் சர்வதேசத் தலையீட்டை அனுமதிக்கப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!
செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்துள்ளது. செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேசத்தின் தலையீட்டை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். செம்மணிப் புதைகுழி அகழ்வைக் கண்காணிக்க சர்வதேசத்தின் தலையீட்டைக்கோரி வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ்த் தரப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே, செம்மணியில் சர்வதேசத் தலையீடு தேவையில்லை என்று பிரதியமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
செம்மணிப்புதைகுழியில் இடம்பெறும் அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. அரசாங்கம் தனது பங்களிப்பை உணர்ந்து பொறுப்பை மிகச்சரியாக நிறைவேற்றிவருவதுடன் நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், சர்வதேசம் தான் தலையிட வேண்டும் என்று கோருவது நியாயமற்றது.
சிலவேளைகளில் தொழில்நுட்ப அல்லது நிபுணத்துவ உதவிகளை சர்வதேசத்தில் இருந்து பெறவேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறான நிலை ஏற்பட்டால். அரசாங்கம் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்றும்- என்றார்.