இலங்கை
ஜனாதிபதியிடம் சென்ற தேசபந்து பதவி நீக்கப் பிரேரணை

ஜனாதிபதியிடம் சென்ற தேசபந்து பதவி நீக்கப் பிரேரணை
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து நேற்றையதினம் (5) ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார் .
அதன்படி, புதிய காவல்துறை மா அதிபரின் பெயர் இன்று (6) அரசியலமைப்பு சபையால் பெறப்படும் என்று அவர் கூறினார்.
நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அல்லது சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பெறப்பட்டன, அதற்கு எதிராக எந்த வாக்குகளும் பெறப்படவில்லை.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.