இலங்கை
ட்ரம்பை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டு செயற்படும் அநுரவின் ஜே.வி.பி.

ட்ரம்பை கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டு செயற்படும் அநுரவின் ஜே.வி.பி.
ஜே.வி.பி. தமது தலைவரான ரோஹன விஜேவீரவின் கொள்கையை மாற்றி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தமது தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது கொள்கையை முழுமையாகப் பின்பற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) அன்ற இடம்பெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ட்ரம்பின் வழியிலேயே இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சட்ட மூலம் ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.என்பதனால் இந்த சட்டமூலத்தை ஏற்கமுடியாது என்றும் கூறினார்.
மேலும், அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை முழுமையாகத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தீர்மானம் எடுக்கும் உரிமை தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, இது ஊழல் மோசடிக்கு வழிவகுக்கும்.
ஆகவே, இந்த சட்டமூலத்துக்கு எதிராகவே நாம் வாக்களிப்போம்
2004ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் மின்சாரத்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு புதிய கருத்திட்டங்களை மேற்கொண்டன.
இந்த திட்டங்கள் அனைத்துக்கும் ஜே .வி.பி.கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
ஜே.வி.பி. 1987 மற்றும் 1988ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்கொண்ட வன்முறைகளினால் அரச சொத்துக்கள் பல அழிக்கப்பட்டன. சேதமடைந்தன.
இவற்றில் மின்பிறப்பாக்கிகளை பிரதானமாக குறிப்பிட வேண்டும். மின்பிறப்பாக்கிகளை வெடிக்கச் செய்து முழு நாட்டையும் இருளுக்குள் தள்ளினார்கள்.
மின்சாரத்துறை கட்டமைப்பைப் புதுப்பிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி 2004ஆம் ஆண்டு கொண்டு வந்த கருத்திட்டத்தை ஜே.வி.பி.கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி.யின் எதிர்ப்பினால் இலங்கையின் மின்சாரத்துறை கட்டமைப்பு பாரிய பின்னடைவை எதிர்கொண்டது என்றார்.