இலங்கை
தென்னக்கோனின் பின்புலம் விசாரிக்கப்படுதல் அவசியம்; எதிர்க்கட்சி வலியுறுத்து

தென்னக்கோனின் பின்புலம் விசாரிக்கப்படுதல் அவசியம்; எதிர்க்கட்சி வலியுறுத்து
தேசபந்து தென்னகோன் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களுக்கு ஆலோசனை வழங்கிய, அவரை வழிநடத்திய அரசியல் தலைவர்கள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் நேற்றைய அமர்வில் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த காலங்களில் எல்லா விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடிய தேசிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை. அவருடன் ஏதேனும் ‘டீல்’ இருந்ததா? தேசபந்து தென்னகோனுக்கு இவ்வாறான விடயங்களை செய்வதற்கு ஆலோசனை வழங்கிய அரசியல்வாதிகளும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் ஏன் கதைக்கப்படவில்லை? அரசியல் தலைவர்களின் தேவைகளை நிறைவேற்ற முற்பட்டதால் தான் தேசபந்து இன்று பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார். தேசபந்துவுக்கு ஆலோசனை வழங்கிய, வழிநடத்திய அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் பற்றியும் தேடப்பட வேண்டும். தேசபந்து விடயத்தில் இருந்து தற்போதைய அரச அதிகாரிகள் ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்காக, அரசியல் தேவைகளை நிறைவேற்ற முற்பட்டால் இறுதியில் இந்தநிலைதான் ஏற்படும்- என்றார்.