இலங்கை
நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு ஐ.நா.விடமிருந்து உதவி; அமைச்சரவை அனுமதி!

நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு ஐ.நா.விடமிருந்து உதவி; அமைச்சரவை அனுமதி!
நல்லினம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை ஐ.நா.அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல்படுத்துவதற்குமான அதிகாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசியகொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைகின்ற படிமுறைகளைத் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தயாரித்துள்ளது.
அதற்கமைய பல்துறைசார் அணுகுமுறை மூலம் 2025-2029 காலப் பகுதிக்கான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்குரிய அமைச்சுகள் மற்றும் நிரல் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அமைச்சுகளுக்கு இடையிலான செயலணியொன்றை தாபிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது – என்றார்.