இலங்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், இதுவரை 50 இற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராக செயல்படுவது ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் கட்சிகளிடையே இன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி, சர்வஜன அதிகாரம், இலங்கைத் தமிழரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.