உலகம்
பிரான்சின் அவுட் மாவட்டத்தில் பாரிய காட்டுத் தீ; பலர் காயம்!

பிரான்சின் அவுட் மாவட்டத்தில் பாரிய காட்டுத் தீ; பலர் காயம்!
பிரான்ஸின் அவூட் மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 1,200 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பித்த தீ பரவல் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதால் தீப்பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.