இலங்கை
யாழ் விருது 2025 – ஆசான் சின்னத்தம்பி குணசீலனுக்கு பெருமைக்குரிய அங்கீகாரம்!

யாழ் விருது 2025 – ஆசான் சின்னத்தம்பி குணசீலனுக்கு பெருமைக்குரிய அங்கீகாரம்!
யாழ்ப்பாண கல்வி, கலை, சமய வளர்ச்சிக்கு பணியாற்றும் நற்செயலாளர்களை கௌரவிக்கும் முகமாக யாழ்ப்பாண மாநகரசபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும் யாழ் விருது 2025ம் ஆண்டிற்காக, ஓய்வு நிலை விரிவுரையாளரும் கல்வித் துறையின் ஒளிவிழக்கும் ஆன்மீக ஒளியுமாக விளங்கும் திரு சின்னத்தம்பி குணசீலன் சேர் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பது தமிழ்ச் சமூகத்தின் கல்விச் சேவைக்கான உயரிய அங்கீகாரமாகும்.
ஆசிரியத்துவத்தின் ஒர் அடையாளம்
வடமராட்சியைச் சேர்ந்த சின்னத்தம்பி – சிவகாமி தம்பதிகளின் மகனாகப் பிறந்த குணசீலன் அவர்கள், தாயார் கற்பித்த உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுத் தொடங்கிய கல்விப்பயணத்தை, நெல்லியடி மகா வித்தியாலயத்தில் இடைநிலை, உயர்தரக் கல்வியுடன் வளர்த்தெடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானார். விஞ்ஞானப் பட்டப்படிப்பு வல்வெட்டித்துறைக் கல்லூரியில் நிறைவு செய்த பின், பருத்தித்துறை மெதடிஸ்த் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், பின்பு பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகச் சேவையாற்றினார்.
தனியார் கல்வி நிறுவனங்கள் வாயிலாகவும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயிரியல் பாடத்தில் தன்னை அர்ப்பணித்து, அக்கால கல்விக்கட்டமைப்பின் அச்சத்தில் கல்வியினை காக்கும் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார்.
கல்வியின் உந்துசக்தியாக!
சிக்கலான காலகட்டங்களில் மாணவர்கள் கல்வியில் பின்னடைவுறாதிருக்க, கல்வி என்பது அரியணை அல்ல, அருந்தவம் என்பதைத் தம் வாழ்வால் எடுத்துச் சொன்னவர் குணசீலன் ஆசான். இவர் வழிகாட்டிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இப்போது உலகின் பல பாகங்களில் மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், கல்வியாளர்களாகவும் திகழ்கின்றனர் என்பது பெருமைக்குரியது.
மாணவர்களின் வாழ்விலும், எதிர்காலத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் ஆசிரியராக, அவர்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு உதவிக்கரம் நீட்டிய பரிசுத்த உள்ளமாகவும் மாணவர்கள் மனங்களில் பதிவாகியிருக்கிறார்.வாழ்த்துக்கள் குருவே!
லங்கா4 (Lanka4)
அனுசரணை