இந்தியா
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா செல்லும் மோடி; கல்வான் மோதலுக்குப் பின் முதல் பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா செல்லும் மோடி; கல்வான் மோதலுக்குப் பின் முதல் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். 2020-ம் ஆண்டு கல்வான் மோதலுக்குப் பிறகு, பிரதமர் மோடியின் முதல் சீன பயணம் இதுவாகும்.ஆங்கிலத்தில் படிக்க:பிரதமர் மோடி 2019-க்கு பிறகு பெய்ஜிங்கிற்கு செல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, அவர் அக்டோபர் 2024-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.ரஷ்யாவின் கசான் நகரில் இரு தலைவர்களும் சந்தித்த பிறகு, லடாக் எல்லைப் பகுதியான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா மற்றும் சீனா திட்டமிட்டிருப்பதாக அறிவித்தன. 2020 முதல் இந்த இரண்டு பகுதிகளிலும் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.இதற்கு முன்னதாக, ஜூலை மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 2020-ல் கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி) பகுதியில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதன்முறையாக சீனாவிற்கு சென்றார். அங்கு அவர் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள “சமீபத்திய முன்னேற்றங்கள்” குறித்து எடுத்துரைத்தார். இரு நாடுகளும் உறவுகளை சரிசெய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) தலைமைப் பொறுப்பை சீனா வகிக்கிறது. இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் மாதம் சீனாவிற்குச் சென்று திரும்பிய பிறகு, ஜெய்சங்கரின் பயணம் அமைந்தது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி குறிப்பிடாத வரைவு அறிக்கையில் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதேபோல், ஜெய்சங்கரும் பயங்கரவாதம் பற்றி பேச இந்த தளத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அவர், “பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம்” ஆகிய “மூன்று தீமைகளையும்” எதிர்த்துப் போராடுவதற்காகவே 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. மேலும், இந்த சவாலுக்கு எதிராக இந்த அமைப்பு ஒரு “சமரசம் இல்லாத நிலைப்பாட்டை” எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.