வணிகம்
ரெண்டு தனியார் கம்பெனிக்காக 2 நாடுகள் ஏன் மோதிக்கணும்? ஆனந்த் சீனிவாசன் கேள்வி

ரெண்டு தனியார் கம்பெனிக்காக 2 நாடுகள் ஏன் மோதிக்கணும்? ஆனந்த் சீனிவாசன் கேள்வி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு தொடர்பாக அதிரடியான அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது என முதலில் அவர் குறிப்பிட்ட நிலையில், பின்னர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய்யை வாங்கி வரும் சூழலில், அதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு பல காரணங்களையும் கூறி வருகிறது. குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் இந்தியா செயல்படுகிறது என்றும் குறைந்த விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி, பிற நாடுகளிடம் அதிக விலைக்கு விற்கிறது என்றும் குற்றச்சாட்டுகளை டிரம்ப் சுமத்தி இருந்தார். இந்த சூழலில் தான், இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது என டிரம்ப் நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. மேலும், மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பு குறித்து மூத்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மணி பேச்சு யூடியூப் சேனலில் பேசுகையில், “டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால், ‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. உக்ரைனில் நிலவும் மரணங்களுக்கு இந்தியா தான் காரணம். அதனால் அவர்களுக்கு பெரிய அபராதம் போடப்போகிறேன்’ என்கிறார். நம்ம ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால், ‘இந்த அமெரிக்கா நமது எதிரி. நாம் ரஷ்யன் ஆயில் வாங்குவது தப்பா?’ அப்படின்னு கேட்கிறார்கள். நான் என்ன கேட்கிறேன் என்றால், ரஷ்யன் ஆயில் வாங்குவது தப்பே கிடையாது. ஆனால், அதை வாங்கி உங்கள் ஏ1-ண்ணுக்கு தானே கொடுக்கிறீர்கள். ஏ1 தானே காசு பணம் சம்பாரிக்கிறார். அதில் மக்களுக்கு என்ன கிடைத்தது? அதனால், ஏ1-ண்ணுக்காக இந்தியா – அமெரிக்கா சண்டை போடுவது எந்த ஊர் நியாயம். ஏ1 வசம் இருக்கும் கம்பெனிகள் எவ்வளவு ரஷ்யன் ஆயில் வாங்கி இருக்கிறார்கள் என்பதையும், இந்தியா ஆயில் நிறுவனம், பாரத் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் எவ்வளவு ரஷ்யன் ஆயில் வாங்கி இருக்கிறார்கள் என்பதையும் நீங்களே பாருங்க. அதனால், பணம் எங்கே போச்சு என்று கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் நம்மடை தேசத் துரோகி என்பார்கள். நாம் இன்று அமெரிக்காவை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். மக்களுக்கு பயன் இல்லாத ரஷ்யன் ஆயில் வாங்கி ஏன் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும். இதனால், திருப்பூரில் இருக்கும் நம் மக்கள் டி-சர்ட், பனியன் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாகும். கெமிக்கல் ஏற்றுமதி செய்ய முடியாது. வைரம், தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டும். ஆனால், இந்த கச்சா எண்ணெயில் இருந்து வந்த லாபம் யாருக்கு போச்சுன்னு மாட்டு கேட்கக் கூடாது. அது ஏ1-ண்ணுக்குத் தான் போச்சு. தவிர நயாரா என்ற மற்றொரு கம்பெனிக்கும் போயி இருக்கு. எஸ்ஸார் ஆயில் நிறுவனம் நயாரா எனர்ஜி நிறுவனத்துக்கு விற்கப்பட்ட போது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம். பூ பறித்துக் கொண்டிருந்தோமா? அதனால், இரண்டு தனியார் கம்பெனிகளுக்காக ஏன் இரண்டு நாடுகள் ஒருவரையொருவர் எதிர்க்க வேண்டும்? என்பது தான் எனது சிம்பிள் பாயிண்ட்.” என்று ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.