இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இதனை கூறினர்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினர்களின் ஆதரவையும் திரட்டி கையொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை, குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விசேட ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, நிசாம் காரியப்பர் மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலேயே பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் 6வது பிரிவில், “உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பகிரங்க நம்பிக்கைக்கு இணங்க செயலாற்றுதல் முக்கியமானதாகும்.
அவர்களின் நடவடிக்கைள் எப்போதும் நேர்மையுடனும், ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது மீறப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 9வது பிரிவின் படி, மனசாட்சிப்படி நடத்தல், மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வகையில் செயற்படல் என்பன மீறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாலும் அவருக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.