இலங்கை
செம்மணி விவகாரம்: சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்! உமா குமரன் வேண்டுகோள்

செம்மணி விவகாரம்: சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்! உமா குமரன் வேண்டுகோள்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தினை, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, விசாரணை செய்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உமா குமரன் இவ்வாறு வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கருத்துத் தெரிவிக்கையில்
செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பாரிய பேரழிவு. அகழ்வுப் பணிகளின்போது ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னால், துயரத்தில் மறைந்த பல உண்மை மூடி மறைக்கப்பட்டுள்ளன.
நீதியை தேடும் ஒவ்வொரு குடும்பத்தினதும் வலிகள் அங்கு காணப்படுகின்றது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகம் எம்முடன் ஒன்றுபடவேண்டும்.
பிரிட்டன், மனித புதைகுழி தொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என்ற கேள்வியை நான் எழுப்பியிருந்தேன்.
இந்த விடயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன்.
சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவும் நமது பங்கிற்கு முழுமையாக பங்களிப்பை ஆற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை