Connect with us

இந்தியா

தெலங்கானா போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: பி.ஆர்.எஸ் ஆட்சியில் நடந்த சட்டவிரோத கண்காணிப்பு; ‘ரகசியக் கடிதங்கள்’ அம்பலப்படுத்தியது எப்படி?

Published

on

Chandrashekhar

Loading

தெலங்கானா போன் ஒட்டுகேட்பு சர்ச்சை: பி.ஆர்.எஸ் ஆட்சியில் நடந்த சட்டவிரோத கண்காணிப்பு; ‘ரகசியக் கடிதங்கள்’ அம்பலப்படுத்தியது எப்படி?

டிசம்பர் 6, 2023 அன்று தெலங்கானாவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் (SIB) ஹைதராபாத் அலுவலகத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்து கடிதம் வந்தது. அதிகாரபூர்வ மொழியில், இது ‘இணக்கக் கடிதம்’ (reconciliation letter) என்றழைக்கப்பட்டது. ‘மிகவும் ரகசியம்’ என முத்திரையிடப்பட்டிருந்த அக்கடிதம், அப்போதைய SIB-யின் DIG-க்கு அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ரேவந்த் ரெட்டி தலைமையில் ஆட்சிக்கு வந்தது. சந்திரசேகர் ராவின் BRS கட்சி ஆட்சி இழந்திருந்தது.அக்கடிதத்தில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம், குறிப்பிட்ட சில தொலைபேசி எண்களின் சட்டபூர்வமான கண்காணிப்பு அல்லது உளவு நடவடிக்கைகளைத் தொடரலாமா எனக் கேட்டிருந்தது. அக்கடிதத்தின்படி, இணைக்கப்பட்ட எண்களின் பட்டியல், நவம்பர் 16 முதல் நவம்பர் 30, 2023 வரை அதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய 15 நாட்களுக்கு சட்டபூர்வமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கசட்டபூர்வமான கண்காணிப்பின் 15 நாள் காலக்கெடு முடிந்ததும், சேவை வழங்குநர்கள் அடுத்த 15 நாட்களுக்கு மீண்டும் அங்கீகாரம் கோரி இத்தகைய இணக்கக் கடிதங்களை அனுப்புவது வழக்கம். இந்தக் கடிதமும், இதேபோன்ற மேலும் சில புகழ்பெற்ற தனியார், பொதுத்துறை சேவை வழங்குநர்களால் SIB அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட இணக்கக் கடிதங்களும், தெலங்கானா மாநில வழக்கில் அடிப்படையாக அமைந்துள்ளன. இந்த வழக்கில், 5 உயர் காவல் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள், மாநிலத்தின் நக்சல் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி 600 தனிநபர்களை சட்டவிரோதமாகக் கண்காணித்து, BRS கட்சிக்கு ஆதாயம் தேட முயற்சித்தனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.கண்காணிக்கப்பட்டவர்களில் அரசியல்வாதிகள், கட்சிப் பணியாளர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி, அத்துடன் அவர்களின் மனைவி, ஓட்டுநர்கள் மற்றும் நண்பர்கள் கூட அடங்குவர் என அதிகாரபூர்வ ஆவணங்கள் மற்றும் புலனாய்வாளர்களுடனான உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஜூன் 8, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டது.புலனாய்வில் ஈடுபட்ட அதிகாரிகளும், குற்றப்பத்திரிகையும் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் சாத்தியமான அரசியல் தலைவர்களையும், BRS கட்சிக்குள்ளேயே இருந்த அதிருப்தியாளர்களையும் கண்காணிப்பதன் மூலம் BRS-இன் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதே இந்தச் சட்டவிரோத கண்காணிப்பின் நோக்கம்” எனக் கூறியுள்ளனர்.டிசம்பர் 6, 2023 தேதியிட்ட இணக்கக் கடிதம், “மேற்கண்ட காலகட்டத்தில், இணைக்கப்பட்டுள்ள விவரங்களின்படி மொபைல்/IMEI/ILD எண்களை சட்டபூர்வமாகக் கண்காணிக்கக் கோரி எங்களுக்குக் கோரிக்கை கடிதங்கள் கிடைத்துள்ளன என்பதைத் தெரிவிக்கிறோம்: தயவுசெய்து அக்கடிதங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்” என்று கூறியது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் பதிலளிக்கவில்லை.1990-ல் உருவாக்கப்பட்ட SIB-இன் முக்கியப் பணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) செயல்பாடுகளைக் கண்காணித்துத் தடுப்பதாகும். ஆனால், “கண்காணிக்கப்பட்ட 600 எண்களில் பெரும்பாலானவை இடதுசாரி தீவிரவாதம் (அ) CPI (மாவோயிஸ்ட்) உடன் தொடர்பில்லாதவை” என்று உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. “புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரித்தபோது, அவை அரசியல்வாதிகள், அதிகாரிகள், கட்சிப் பணியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் எண்கள் என்பது தெரியவந்தது” என்று ஒரு உயர் மட்ட வட்டாரம் தெரிவித்தது.குற்றம் சாட்டப்பட்டவர்கள்:இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்: முன்னாள் SIB தலைவர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டி. பிரபாகர் ராவ், துணை காவல் கண்காணிப்பாளர் டி. பிரனீத் ராவ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம். திருபதன்னா மற்றும் என். புஜங்கா ராவ், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் பி. ராதாகிஷன் ராவ் மற்றும் தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் ஏ. ஷ்ரவன் குமார் ராவ்.இதில், பிரபாகர் ராவ்வுக்கு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 5 வரை கைது செய்யப்படாமல் பாதுகாப்பு அளித்துள்ளது. பிரனீத் ராவ், திருபதன்னா, புஜங்கா ராவ் மற்றும் ராதாகிஷன் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர். ஏ. ஷ்ரவன் குமார் ராவ் வேறு ஒரு வழக்கில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.முன்னர் தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என அழைக்கப்பட்ட BRS கட்சி, 2014-ல் இருந்து 10 ஆண்டுகள் தெலங்கானாவில் ஆட்சியில் இருந்தது. BRS தலைவர் மற்றும் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த கே. சந்திரசேகர் ராவ், மாநில உளவுத்துறையின் பொறுப்பையும் வைத்திருந்தார். 2023 டிசம்பர் 3 அன்று BRS கட்சி காங்கிரஸிடம் தோல்வியடைந்தபோது, இந்த ஆறு பேருக்கு எதிரான வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள், டிசம்பர் 4 அன்று, SIB தலைவர் பிரபாகர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதே நாளில், அவரது உத்தரவின் பேரில், பிரனீத் ராவும் மற்றவர்களும் ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கும் விதமாக SIB அலுவலகத்தில் இருந்த 62 ஹார்ட் டிஸ்க்குகளை அழித்ததாகப் புலனாய்வாளர்கள் கூறினர்.அழிக்கப்பட்ட மற்றும் ஃபார்மட் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில், “SIB-இன் வளங்கள் அல்லது மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட உளவுத்துறை மூலம் உருவாக்கப்பட்ட BRS எதிர்ப்பாளர்களின் அரசியல் சுயவிவரங்கள்” இருந்ததாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இவற்றில் சில ஹைதராபாத்தில் உள்ள மூசி நதியில் இருந்து மீட்கப்பட்டன.இந்திய தந்தி சட்டம், 1885-இன் படி, பொதுப் பாதுகாப்பு, பொது அவசரநிலை அல்லது அரசுக்கு எதிரான தூண்டுதல் போன்ற சமயங்களில் உரிய அங்கீகாரத்துடன் கண்காணிப்பு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கில், அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் பிரபாகர் ராவிடம் இருந்தது. தலைமைச் செயலாளர், பொது நிர்வாகத் துறை செயலாளர் மற்றும் சட்டத் துறை செயலாளர் அடங்கிய மறுஆய்வுக் குழு அவரது வழிகாட்டுதலின் படி செயல்பட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள், மார்ச் 10, 2024 அன்று முதன்முதலில் வெளிவந்தன. அப்போது, SIB-இன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், டிஎஸ்பி பிரனீத் ராவ் சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்தி உளவுத் தகவல்களைச் சேகரித்து, பின்னர் ஆதாரங்களை அழித்ததாகக் குற்றம் சாட்டினார்.இந்த புகாரே, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அனுப்பிய கடிதங்களில் குறிப்பிடப்பட்ட, சட்டவிரோதமாகக் கண்காணிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை மீண்டும் ஆராய புலனாய்வாளர்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது.குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, கிரிமினல் சதி, அரசு அதிகாரிகள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்துதல், ஆதாரங்களை மறைத்தல், சைபர் பயங்கரவாதம், இலக்கு வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள், அவர்களின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாகக் கண்காணித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எதிர்த்தரப்பின் வாதம்:இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தொடர்பு கொண்டது. எம். திருபதன்னாவின் வழக்கறிஞர் மோஹித் ராவ் கூறுகையில், “தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டு, கேட்கப்பட்டது என்ற ஹைதராபாத் காவல்துறையின் வாதம் தவறானது. LWE (இடதுசாரி தீவிரவாதம்) உடன் தொடர்புடையவர்களின் சட்டபூர்வமான CDR-கள் மட்டுமே பெறப்பட்டன. மேலும், ஏ-1 (பிரபாகர் ராவ்)-இன் கீழ் பணிபுரிந்தவர்கள் அவருக்கு வந்த சட்டபூர்வமான உத்தரவுகளை மட்டுமே பின்பற்றினர்” என்றார்.பிரபாகர் ராவின் வழக்கறிஞர் ஆக்ரிதி ஜெயின் கூறுகையில், தனது கட்சிக்காரர் “உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனுவில் உள்ள வாதங்களை நிலைநிறுத்துகிறார்” என்றார். இந்த மனுவின்படி, அவர் ஒரு சிறந்த காவல் அதிகாரி. SIB தலைவராக இருந்தபோது, சட்டவிரோத கண்காணிப்பில் ஈடுபடவில்லை. ஆதாரம் அழிக்கப்பட்டது குறித்த குற்றச்சாட்டு பற்றி, “அலுவலகத்தை விட்டு சில மணிநேரங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டதால், அந்த சம்பவத்திற்கு மனுதாரர் பொறுப்பல்ல” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவின்படி, பிரபாகர் ராவ் டிசம்பர் 4 அன்று தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பிறகு மாலை 4 மணிக்கு SIB அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டார்.இது குறித்து BRS MLC மற்றும் செய்தித் தொடர்பாளர் தசௌஜு ஷ்ரவன் குமார் கூறுகையில், “அரசுகள், தீவிரவாதிகள் உட்பட சமூக விரோத சக்திகளைச் சரிபார்க்க, சட்டத்தின்படி சட்டபூர்வமான கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. சட்டவிரோதமான கண்காணிப்பு அல்லது அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை குறிவைப்பது என்பது, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி அடங்கிய உச்சநிலைக் குழுவின் அனுமதி இல்லாமல் நடைபெறாது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஹைதராபாத் காவல்துறை, எந்தப் பயனும் இல்லாத ஒரு தேடுதலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் ஒரு ஆதாரமற்ற மற்றும் சட்டவிரோத சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் BRS தலைவர்களின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.பாஜகவிலிருந்து காங்கிரஸ், BRS வரை – யார் கண்காணிக்கப்பட்டனர்?தீகலா கிருஷ்ணா ரெட்டி (முன்னாள் ஹைதராபாத் மேயர் மற்றும் BRS MLA, தற்போது காங்கிரஸ் தலைவர்)”எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு போன்ற மோசமான விஷயத்தை நான் கண்டதில்லை. எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக நான் சந்தேகிக்கவில்லை, ஆனால் காவல்துறை என்னிடம் சொன்னபோதுதான் எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்தேன்”.சரிதா திருபதையா (கட்வால் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் MLA வேட்பாளர்)”தொலைபேசி ஒட்டுக் கேட்பு எனது பிரச்சாரத்தைப் பெரிதும் பாதித்தது. BRS-இன் அரசியல் தலையீட்டால், நான் பிரச்சாரம் செய்தவர்கள் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்ததால், நான் கட்வாலில் 3,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் எனது MLA பதவியை இழந்தேன். நான் கண்காணிக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியும்”.ஜுவ்வாடி நரசிங் ராவ் (கொருட்லா-வின் காங்கிரஸ் தலைவர்)”தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கு வெளிவந்தபோது, நான் தான் முதலில் எதிர்வினையாற்றினேன். எனது அனைத்து நடவடிக்கைகளும் எனது எதிர்ப்பாளர்களால் கணிக்கப்பட்டதால், நான் கண்காணிக்கப்படுவதை நான் அறிந்தேன். நான் ஒரு கிராமத்திற்குச் செல்லும்போது, அங்கு என்னைத் தடுக்க மக்கள் காத்திருப்பார்கள். தேர்தல்கள் நெருங்க நெருங்க எனது சந்தேகம் அதிகரித்தது”.சி. வம்சி கிருஷ்ணா (காங்கிரஸ் MLA)”BRS கட்சியின் MLA ஒருவர், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்ததால் தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் கவலைப்பட்டதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். இது உண்மைதான் என்று எனக்குச் strong-ஆக சந்தேகம் இருந்தது, எனவே நான் எனது நெருங்கிய கூட்டாளிகளுடன் பேச வெவ்வேறு தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினேன்”.கவம்பல்லி சத்யநாராயணா (காங்கிரஸ் MLA)”இந்த விவகாரத்தில் நான் இன்னும் காவல்துறையால் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவில்லை. ஆனால், முன்னாள் TPCC தலைவரும், தற்போதைய தெலங்கானா முதலமைச்சருமான ஏ. ரேவந்த் ரெட்டியுடன் எனக்கு இருந்த நெருக்கம் காரணமாக எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதில் நான் உறுதியாக இருக்கிறேன். ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் ஒட்டுக் கேட்கப்பட்டனர் என்பது எனது உறுதியான நம்பிக்கை”.ஷம்புபூர் ராஜு (BRS MLC மற்றும் TRS இளைஞர் பிரிவுத் தலைவர்)”இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் காவல்துறையிடமிருந்து எனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. நான் கண்காணிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை”.தாதிகொண்டா ராஜய்யா (BRS MLA மற்றும் தெலங்கானாவின் முன்னாள் துணை முதலமைச்சர்)”நான் இதனால் கவலைப்படவில்லை. ஒட்டுக் கேட்பு தொடர்பாக ஹைதராபாத் காவல்துறையிடமிருந்து எனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை”.பட்னம் மகேந்தர் ரெட்டி (BRS MLC மற்றும் முன்னாள் அமைச்சர்)”நான் இதனுடன் தொடர்புபடவில்லை”.காலி அனில் குமார் (ஜஹிராபாத் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு பின்னர் காங்கிரஸில் இணைந்த BRS தலைவர்)”நான் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறேன் என்றும் எனது நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்றும் நான் எப்போதும் சந்தேகம் கொண்டிருந்தேன்”.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன