இலங்கை
போரை முடித்துவைத்ததால் பழிவாங்கப்படும் கடற்படை; விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு!

போரை முடித்துவைத்ததால் பழிவாங்கப்படும் கடற்படை; விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு!
புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்துப் போரை முடிப்பதற்குக் கடற்படையினர் முக்கியமான பங்களிப்பு வழங்கினார். எனவேதான் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் தேவைக்காக படையினர் பழிவாங்கப்பட்டு வருகின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். படையில் இருந்த ஒருவருக்கு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து, அவரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக்கூட படைத்தளபதிகள் கைது செய்யப்படலாம்.
முன்னாள் கடற்படைத் தளபதி புலனாய்வு அதிகாரியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். போர்க்காலத்தில் கடற்படையினர் முக்கியமான பங்களிப்பை வழங்கினர். புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன. போரை முடிப்பதற்கு இந்த நடவடிக்கை முக்கியமான பங்கு எனலாம். எனவேதான் படையினர் தற்போது துரத்தப்பட்டு பழிவாங்கப்பட்டுவருகின்றனர். இது புலிகளின் தேவைப்பாடாகும். டயஸ்போராக்களின் தேவைப்பாடாகும் – என்றார்.