இலங்கை
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைப் பாகங்கள் மன்னாருக்குள் நுழைவு;

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைப் பாகங்கள் மன்னாருக்குள் நுழைவு;
மன்னாரில் இரண்டாம் கட்டமாகக் காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கான பாகங்களுடன் வந்த வாகனங்கள் பெரும் எதிர்ப்புக்கும், பதற்றத்துக்கும் மத்தியில் தலைமன்னாருக்குள் நேற்று அதிகாலை நுழைந்தன. போராட்டம் இடம்பெற்றது. மன்னாரில் இல்மனைட் அகழ்வு, சட்டவிரோத மணல் அகழ்வு, அத்துமீறி அமைக்கப்படும் காற்றாலைத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் மாவட்ட இளைஞர்கள் இணைந்து ‘கருநிலம் பாதுகாப்பு’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் போராட்டத்தை நேற்று முன்னெடுத்தனர். போராட்டத்தை முன்னிட்டு, பஜார் பகுதியில் இருந்து நகரப் பகுதி வரை அவர்கள் பேரணியாகவும் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்ததாவது:-
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி காணப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று மன்னாரில் இல்மனைட் மணல் அகழ முயற்சித்துவருகிறது.
இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த அனுமதியை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் அதிகாரசபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அறிகின்றோம். இல்மனைட்மணல் அகழப்பட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் கணிசமான நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ் விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்தப் பேரழிவு நிலையைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும் – என்றனர் .