இலங்கை
11 ஆம் திகதி முடங்கும் சேவைகள்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

11 ஆம் திகதி முடங்கும் சேவைகள்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றையதினம் அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சமீப காலமாக மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், தற்போது நாட்டின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால், பல மாவட்ட மற்றும் கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்குவது சவாலாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவத் துறையில் நிலவும் பல்வேறு தீர்வுகாணாத பிரச்சினைகள் உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.