வணிகம்
135 செகண்ட்ஸில் விற்றுத் தீர்ந்த மஹிந்திரா பேட்மேன் எடிஷன் இ.வி கார்! இவ்வளவு ஸ்பெஷல் ஏன்?
135 செகண்ட்ஸில் விற்றுத் தீர்ந்த மஹிந்திரா பேட்மேன் எடிஷன் இ.வி கார்! இவ்வளவு ஸ்பெஷல் ஏன்?
மகிந்திரா நிறுவனத்தின் புதிய BE-6 பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் கார், வெளியானது முதல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ஆக.14-ஆம் தேதி அறிமுகமான இந்த ஸ்பெஷல் எடிஷன், முதலில் 300 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பால், அதன் எண்ணிக்கை 999 யூனிட்களாக உயர்த்தப்பட்டது. அதையும் மீறி, புக்கிங் தொடங்கிய 135 வினாடிகளில் அனைத்து கார்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.இந்த பேட்மேன் எடிஷன், BE 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி-யின் ‘பேக் த்ரீ’ (Pack Three) மாடலை அடிப்படையாகக் கொண்டது. இதில் 79 kWh பேட்டரி பேக் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 682 கி.மீ. வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.27.79 லட்சம். காரின் வெளிப்புறத் தோற்றம், பேட்மேன் ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘சாட்டின் பிளாக்’ நிறத்தில் வருவதுடன், காரின் கதவுகள், ஃபெண்டர், டெயில்கேட் போன்ற பகுதிகளில் பேட்மேன் லோகோ இடம்பெற்றுள்ளது. இதன் பிரேக்குகள் மற்றும் ஸ்ப்ரிங்குகள், ‘ஆல்கெமி கோல்டு’ நிறத்தில் பளபளக்கின்றன. இதன் பின்புற ஆக்சிலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார், அதிகபட்சமாக 286 hp சக்தியையும், 380 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.காரின் இன்ஃபினிட்டி ரூஃபில் (Infinity Roof) ‘டார் அன அட்லைட்’ சின்னமும், உட்புறத்தில் ‘நைட் ட்ரெயில்’ கார்பெட் பலகைகளும், பேட்மேன் ப்ரொஜெக்ஷனும் இடம்பெற்று, சூப்பர் ஹீரோவுக்கான ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. இது கோதம் நகரத்தின் பாதுகாவலருக்கு ஒரு சிறப்பு மரியாதை போலத் தோன்றுகிறது.காரின் உட்புறமும் பேட்மேன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில், இந்த எடிஷனின் வரிசை எண் பொறிக்கப்பட்டுள்ளது. கறுப்பு நிற லெதர் இன்ஸ்ட்ருமென்ட் பேனல், கோல்டன் நிற வேலைப்பாடுகளுடன் பார்ப்பவர்களை கவர்கிறது. ஸ்டீயரிங் வீல், கீ ஃபாப் மற்றும் சீட்கள் என எல்லாவற்றிலும் பேட்மேனின் சின்னம் இடம்பெற்று, கோதம் நகரத்தின் உணர்வை இந்த கார் கொடுக்கிறது. இது வெறும் கார் மட்டுமல்ல, பேட்மேனின் உலகிற்குள் நுழைவதற்கான அனுபவம்!
