இலங்கை
ரணில் விக்கிரமசிங்கவுக்காக கூட்டுச்சேர்ந்த எதிர்கட்சிகள்!
ரணில் விக்கிரமசிங்கவுக்காக கூட்டுச்சேர்ந்த எதிர்கட்சிகள்!
கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பு அரசியல் பழிவாங்கல் எனக் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசாங்கத்தின் சர்வாதிகாரச் செயற்பாடு என்றும் அவை குற்றஞ்சாட்டியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள். பிரதிநிதிகள் கூட்டாக ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். ஊடக சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறி அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மட்டும் முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றது. இன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை வேறொருவருக்கு ஏற்படலாம். அதனால் ஜனநாயகத்தையும், அரசமைப்பையும் பாதுகாக்க அனைவரும் அரசியல், கட்சி பேதமின்றி இணையவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஊடக சந்திப்பில் வலியுறுத்தின. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நபாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்தன, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த. ஜீ.எல்.பீரிஸ், துமிந்த திசாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, டிரான் அலஸ், மஹிந்த அமரவீர, பவித்ரா வன்னியாராச்சி, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
