தொழில்நுட்பம்
2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்: கனடா சுரங்கத்தில் புதைந்திருந்த அரிய ரகசியம்!
2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்: கனடா சுரங்கத்தில் புதைந்திருந்த அரிய ரகசியம்!
கனடாவின் ஒரு சுரங்கத்தின் ஆழத்தில், விசித்திரமான சம்பவம் நடந்தது. மனித நாகரிகம் உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 150 கோடி முதல் 260 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது. புவியியல் விஞ்ஞானியான பேராசிரியர் பார்பரா ஷெர்வுட் லோலார் மற்றும் அவரது குழுவினர்தான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தினர். பூமியின் ஆழமான வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் இந்த அதிசயமான கண்டுபிடிப்பை விட, அந்த விஞ்ஞானி அடுத்ததாக செய்த காரியம்தான் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆம்! அந்தப் பழமையான நீரை, அவரே ஒரு வாய் குடிச்சுப் பார்த்தார்!சுரங்கத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பாறை இடுக்குகளில் சிறிய அளவிலான நீர் மட்டுமே இருக்கும் என்றுதான் விஞ்ஞானிகள் முதலில் நினைத்தனர். ஆனால், அவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், தண்ணீர் ஒரு நீரூற்று போல நிமிடத்திற்கு பல லிட்டர் வேகத்தில் கொப்பளித்து வெளியேறியது. “இந்தத் தண்ணீர் பாறைக்குள் சிக்கிக்கொண்ட சிறிய அளவு நீர் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். ஆனால் அது கொப்பளித்து வெளியேறி, நம்மை நோக்கி வருவதுபோல இருந்தது,” என லோலார் கூறினார். இது பழங்கால நீரின் இயல்பு குறித்த நமது கருத்தையே புரட்டிப்போட்டது.அந்தத் தண்ணீரைக் குடித்தபோது அது “மிகவும் உப்பாகவும், கசப்பாகவும்” இருந்ததாக லோலார் நினைவு கூர்ந்தார். அதன் உவர்ப்புத் தன்மை கடல் நீரை விடவும் பல மடங்கு அதிகமாக இருந்தது. புவியியல் ஆய்வாளர்களுக்கு, இந்த அதிக உப்புத்தன்மை ஒரு நல்ல அறிகுறி. ஏனென்றால், நீர் எவ்வளவு பழமையானதாக இருக்கிறதோ, அதில் தாதுக்கள் கரைந்து அந்த அளவுக்கு உப்புத்தன்மை அதிகரிக்கும்.மேலும், இந்தப் பழமையான நீரில் நுண்ணுயிர்களின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நுண்ணுயிர்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் மூலம், பூமிக்கு அடியில் உள்ள தீவிரமான சூழ்நிலையிலும் உயிரினங்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இது மற்ற கிரகங்களில் உயிர்களைத் தேடும் நம் முயற்சிக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையும்.லோலார் அந்தப் பழமையான நீரை அருந்தியபோது, “பாறைகளுடன் வேலை செய்யும் ஒரு புவியியலாளர் என்றால், நீங்கள் பல பாறைகளை நக்கியிருப்பீர்கள்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அந்த விசித்திரமான சுவையைக் கொண்டிருந்த போதிலும், அவருக்கு எந்தவித உடல்நலக் குறைபாடும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக, அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து, உலகிற்கு இந்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்த வியத்தகு கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு 2016 ஆம் ஆண்டு ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிடப்பட்டது. இது பூமிக்கு அடியில் இருக்கும் சூழலைப் பற்றிய நமது புரிதலை மேலும் ஆழப்படுத்தியது.
