இலங்கை
செம்மணியில் நேற்றும் மூன்று என்புக்கூடுகள்; இதுவரை 169 என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணியில் நேற்றும் மூன்று என்புக்கூடுகள்; இதுவரை 169 என்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. புதைகுழியில் இருந்து நேற்று 8 மனித என்புக்கூட்டுத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் மூன்றாவது கட்டம் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் புதிதாக 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேநேரம், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதுவரையில் செம்மணி மனிதப் புதைகுழியில் 169 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 158 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக பூரணி மரியநாயகம், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் ஆகியோரும் நேற்றைய அகழ்வு நடவடிக்கைகளின்போது முன்னிலையாகினர்.
