பொழுதுபோக்கு
பெண்களை தொடாமல் நடிப்பு: எனது இந்த பண்புக்கு காரணம் இவர் தான்: டி.ஆர் சொன்ன அந்த பிரபலம் யார்?
பெண்களை தொடாமல் நடிப்பு: எனது இந்த பண்புக்கு காரணம் இவர் தான்: டி.ஆர் சொன்ன அந்த பிரபலம் யார்?
சினிமாவில் பல நாயகிகளுடன் இணைந்து நடித்திருந்தாலும், அவர்களை தொட்டு நடிக்காத ஒரே நடிகர் என்றால், அது டி.ராஜேந்தர் தான். இவருக்கு இந்த பண்பு எப்படி வந்தது என்பது குறித்து அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட இவர், 1980-ம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்லூரி மாணவர் கேரக்டரில் கேமியோவாக நடித்திருப்பார்.இந்த படத்தை தொடர்ந்து, வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், 1983-ம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தில் அவர் நடித்த செயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. உயிருள்ளவரை உஷா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை நளினி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த டி.ராஜேந்தர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். குறிப்பாக, உயிருள்ளவரை உஷா திரைப்படத்திற்கு பிறகு தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஹீரோவாக நடித்திருந்த டி.ஆர், ஒரு படத்தில் கூட நாயகியை தொட்டு பேசுவது போன்ற காட்சியில் நடித்திருக்கமாட்டார். நடிப்பு சொல்லிக்கொடுக்கும்போது கூட, அவர் தொட்டு பேசமாட்டார் என்று பல நடிகைகள் கூறியிருக்கிறார்கள். டி.ஆரின் இந்த கன்னியமான பண்புக்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, நான் ஆணையிட்டால் உள்ளிட்ட பாடல்களை கேட்டபிறகு, சின்ன ஒரு டானிக் போன்ற உற்சாகம் எனக்கு கிடைத்தது, நான் ஒரு வெறித்தமான, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி தப்பா பேசுனா குத்துனா மூக்குல வரும் ரத்தம். ஆனால் நான் ரத்தத்தின் ரத்தம். இன்றைக்கு நான் இவ்வளவு சாதனை செய்திருக்கிறேன் என்றால், இப்போது கூட சார்லி கேட்டார் என்ன டி.ஆர். இவ்வளவு ட்ரிம்மா இருக்கீங்கனு, அதற்கு காரணம் உடற்பயிற்சி மனப்பயிற்சி.உடற்பயிற்சி கூடத்தில் கூட உடற்பயிற்சி செய்ய முன் உதாரணம் யார் என்று கேட்டால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று மட்டுமே நான் சொல்வேன். என் பக்கத்தில் வந்து அவ்வளவு பெண்கள் கை கொடுக்க வந்தாங்க, தமிழர் பண்பாடு பெண்களை கையெடுத்து கும்பிட வேண்டுமே தவிர, கை கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன். இந்த பண்பாடு என்னிடம் வளர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு முன்னோடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர் மட்டுமே என்று கூறியுள்ளார்.
