பொழுதுபோக்கு
தமிழில் 4 பேர், தெலுங்கில் எக்ஸ்டாரா ஒரு கொலை; ‘நான் மகான் அல்ல’ படத்தில் தெலுங்கு க்ளைமேக்ஸில் பெரிய மாற்றம்!
தமிழில் 4 பேர், தெலுங்கில் எக்ஸ்டாரா ஒரு கொலை; ‘நான் மகான் அல்ல’ படத்தில் தெலுங்கு க்ளைமேக்ஸில் பெரிய மாற்றம்!
கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நான் மகான் அல்ல படம், தமிழில் ஒரு க்ளைமேக்ஸ் தெலுங்கில் வேறு க்ளைமேக்ஸ் திரையிடப்பட்டதாக இயக்குனர் சுசீந்திரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.2009-ம் ஆண்டு வெளியான வென்னிலா கபடிக்குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2010-ம் ஆண்டு வெளியான படம் நான் மகான் அல்ல. சுசீந்திரன் இயக்கிய 2-வது படமாக இந்த படத்தில், கார்த்தி, காஜல் அகர்வால், சூரி, விஜய் சேதுபதி, அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்திருந்தார்.படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள், ஒரு பெண்ணை கொலை செய்து, அந்த கொலையை பார்த்தவர்களை தொடர்ந்து கொலை செய்யும் நோக்கத்தில் துரத்துகின்றனர். இதில் ஹீரோ அப்பா மாட்டிக்கொள்ள, ஹீரோ அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பது தான் படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாக செல்லும் திரைக்கதை.முதல் பாதி, காமெடியுடன், 2-ம் பாதி விறுவிறுப்பாக ஆக்ஷனுடன் வெளியான இந்த படத்தில் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது. கொலை வெறியில் சுற்றும் 4 வில்லன்களையும், ஹீரோ கார்த்தி சமாளித்து அடித்து அதே இடத்தில் புதைத்துவிட்டு அங்கிருந்து போகும்போது படம் முடிந்துவிடும். ஆனால் படத்திற்காக 2 க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வில்லன்களை பழி தீர்ப்பதுடன் தமிழில் படம் முடிந்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.அதேசமயம், தெலுங்கில் இந்த படத்தின் 2-வது க்ளைமெக்ஸ் காட்சி திரையிடப்பட்டுள்ளது, 4 வில்லன்களையும், பழி தீர்த்துவிட்டு, வீட்டுக்கு சென்றுவிடுவார். அதன்பிறகு அவரது தங்கை திருமணம் நடைபெறும். திருமண வீட்டுக்கு அருகில் நடக்கும் கட்டிட பணியில், காண்ட்ராக்ட் எடுத்தவர் ஒருவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். அந்த பெண்ணின் அம்மா அழுதுகொண்டு இருப்பார். இதை பார்த்த சூரி, இதை கார்த்தியிடம் வந்து சொல்வார்.கார்த்தி அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த பில்டர் அங்கே வந்து அந்த பெண்ணை, திட்டிக்கொண்டு இருப்பார். அடுத்த காட்சியில் கார்த்தி அந்த பில்டரை அடித்து கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டு வருவார். அத்துடன் படம் முடிந்துவிடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த க்ளைமேக்ஸ் காட்சி தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்றதாக, சுசீந்திரன் கூறியுள்ளார்.
