இலங்கை
அரசியல் தலையீடு இன்றி சட்டம் நிலைநாட்டப்படும்; பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
அரசியல் தலையீடு இன்றி சட்டம் நிலைநாட்டப்படும்; பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு அரசமைப்பின் ஊடாக எனக்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எனது கைகள் கட்டப்படவில்லை. அரசியல் தலையீடுகளுமில்லை. வழங்கிய பொறுப்பை முறையாக நிறைவேற்றுவேன் எனப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதாளக் குழுக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்வொன்றில் கருத்துத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு பொலிஸ் பிரிவுக்கு உண்டு. ஏனைய பாதுகாப்புப் பிரிவுகளைக் காட்டிலும் பொதுமக்கள் பொலிஸாருடன்தான் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். ஆகவே பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாகச் செயற்படுத்த எடுக்கும் தீர்மானங்களைப் பொலிஸ் அதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். முறையாகச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
