இலங்கை
கட்சி அலுவலகத்துக்குள் வாள்களுடன் நுழைந்து அடாவடி ; அரசாங்க தரப்பு மீது குற்றச்சாட்டு
கட்சி அலுவலகத்துக்குள் வாள்களுடன் நுழைந்து அடாவடி ; அரசாங்க தரப்பு மீது குற்றச்சாட்டு
கம்பஹா, யக்கலவில் உள்ள முன்னிலை சோஷலிசக் கட்சி பிரதான அலுவலகத்தை இன்று (2) காலை அரசாங்க ஆதரவாளர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு, அங்கு இருந்தவர்களைத் தாக்கி, அலுவலகத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்ததாக அந்த கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும், அந்தக் குழுவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் மாவட்ட மற்றும் பிராந்திய அமைப்பாளர்கள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்த தாக்குதலைத் தடுக்க பொலிஸார் எந்த வகையிலும் தலையிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
முன்னிலை சோஷலிசக் கட்சிக்கு சொந்தமான இந்த அலுவலகம், கடந்த 14 ஆண்டுகளாக கட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நடவடிக்கைகள், கட்சி அமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட இந்தக் கட்சியின் அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் இந்த இடத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன.
நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகக் கூறி, அரசாங்க தரப்பினர் இந்த இடத்தை முற்றுகையிடுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என புபுது ஜயகொட சுட்டிக்காட்டுகிறார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜித் குருவிட்ட, இந்தத் தாக்குதல் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு குழுவால் நடத்தப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஒருவர் ஒரு இடத்திலிருந்து எதனையாவது அகற்ற விரும்பினால், அவர்கள் நீதிமன்ற அறிவித்தலுடன் வர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட இடத்தில் தமது கட்சிக்குச் சொந்தமான ஏராளமான பொருட்களும், நூலகத்திற்குச் சொந்தமான புத்தகங்களும் உள்ளன என்றும் சுஜித் குருவிட்ட கூறினார்.
அரச அலுவலகங்களை சுத்தம் செய்வதாகக் கூறி ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதனை தற்போது தங்களை எதிர்க்கும் கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்களைத் தாக்கும் வழிமுறையாக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இது குறித்து எமது செய்திப் பிரிவு காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லரிடம் வினவியபோது, இது குறித்து தமக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனினும், சட்ட விவகாரம் தொடர்பாக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் தகவல் கிடைத்ததும் அது குறித்து தெளிவுபடுத்துவதாகவும் கூறினார்.
