இந்தியா
புதுச்சேரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்: விடிய விடிய நடந்த சோதனை
புதுச்சேரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்: விடிய விடிய நடந்த சோதனை
புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் செயல்பட்டுவந்த மருந்து தொழிற்சாலையில் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில், மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு மற்றும் புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை வளாகத்தில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு முறையான உரிமம் இல்லாமல், ரூ. 99.47 லட்சம் மதிப்புள்ள போலி கேப்ஸுல்கள் மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சோதனையின்போது, இந்த போலி கேப்ஸுல்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ‘நேச்சுரல் கேப்ஸுல் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும், சென்னையில் உள்ள ‘நெபுலே பார்மசியூட்டிகல்ஸ்’ மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஃபேபுலஸ் லைப் சயின்சஸ்’ ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்த முதன்மை பேக்கிங் செய்யப்பட்ட மாத்திரைகள், அலுமினிய ஃபாயில் பேக்கிங் மற்றும் அட்டைப் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சோதனையில், மருந்துகள் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
