இந்தியா
புதுச்சேரி பெண் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர்கள் டார்ச்சர்: ‘கடிதம் கொடுத்தால் நடவடிக்கை’ – சபாநாயகர் பேட்டி
புதுச்சேரி பெண் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர்கள் டார்ச்சர்: ‘கடிதம் கொடுத்தால் நடவடிக்கை’ – சபாநாயகர் பேட்டி
புதுச்சேரி அமைச்சர்கள் டார்ச்சர் குறித்து என்.ஆர் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா எந்த கடிதமும் தன்னிடம் தரவில்லை என்றும், அப்படி தந்தால் முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்கிறோம். எனினும் சில சமயங்களில் கட்சியினர் கட் அவுட் வைத்து விடுகின்றனர். இந்நிலையில், கட் அவுட் வைத்தது தொடர்பாக ஒரு வாரம் முன்பு எனக்கு ஒரு சம்மன் வந்தது. விசாரித்தபோது, இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் உள்ளார் என்பது தெரியவந்தது.தொடர்ந்து குறுகிய சிந்தனையோடு எனக்கு எதிராக செயல்படுகின்றனர். தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இது நாகரிகமான அரசியல் இல்லை. நான் எல்லோரையும் குறை சொல்ல விரும்பவில்லை. 2 அமைச்சர்கள் இதுபோல எனது அரசியல் வளர்ச்சிக்கு எதிராக தொல்லை கொடுத்து வருகின்றனர்.எனது அப்பா ஸ்தானத்தில் உள்ள முதல்வர் ஒருவருக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டு, நான் பெயர் சொல்லாமல் இருக்கிறேன். எனக்கு டார்ச்சர் கொடுக்கப்படுவதை நான் அறிந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.” என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா விவகாரம் தொடர்பாக சபாநாயகர் செல்வம் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அமைச்சர்கள் டார்ச்சர் குறித்து பெண் எம்.எல்.ஏ எந்த கடிதமும் என்னிடம் தரவில்லை. அப்படி தந்தால் முதல்வர் ரங்கசாமியிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த அமைச்சர் என அவர் கூறவில்லை. நான் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை.” என்று அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டி புதிய வரி விதிப்பு தொடர்பாக சபாநாயகர் செல்வம் பேசுகையில், “2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது வரி சீர்திருத்தம் செய்தார். இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். தற்போது 4 பிரிவுகளாக இருந்த ஜி.எஸ்.டி வரியை 2 பிரிவுகளாக மாற்றம் செய்துள்ளார். அமெரிக்கா நம் மீது 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த வரி குறைப்பை மோடி வெளியிட்டுள்ளார். மருத்து காப்பீடு வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு பெரியளவில் பயன் கிடைக்கும். கல்வி உபகரணம் வரியையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. 28 சதவீதமாக இருந்த அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்த ஊக்கவிப்பதாக அமையும். தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் இதை வரவேற்றுள்ளனர். இந்த மாதமே வரி குறைப்பு அமலுக்கு வருகிறது.புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்ட முன்னாள் கவர்னர் தடையாக இருந்தார். தற்போதைய கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை செயலாளரை அழைத்து பேசி, அனுமதி வழங்குவதாக கவர்னர் கூறியுள்ளார். சட்டமன்ற பணிக்காக தனி செயலாளராக முத்தம்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசிடமிருந்து நிதியை பெற உதவுவார். புதிய சட்டமன்றத்துக்கான வரைபடம், திட்டமதிப்பீடு ரூ.669 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்குள்ளாகவே புதிய சட்டமன்றம் கட்ட அடிக்கல் நாட்டப்படும். 16 முறை அனுப்பப்பட்ட மாநில அந்தஸ்து வலியுறுத்தும் கோப்பு ஒரு முறை மட்டுமே மத்திய அரசுக்கு சென்றது. அந்த கோப்புக்கு, தற்போதைய நிலையே தொடர மத்திய அரசு தெரிவித்தது. சட்டசபை விரைவில் கூட்டப்பட உள்ளது. அப்போது, மாநில அந்தஸ்து தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் செல்வம் கூறினார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
