இந்தியா
சுகாதாரமான குடிநீர் வழங்கும் கடமை தவறிவிட்டது: என்.ஆர். காங். – பா.ஜ.க கூட்டணி அரசு மீது அ.தி.மு.க குற்றச்சாட்டு
சுகாதாரமான குடிநீர் வழங்கும் கடமை தவறிவிட்டது: என்.ஆர். காங். – பா.ஜ.க கூட்டணி அரசு மீது அ.தி.மு.க குற்றச்சாட்டு
இது குறித்து புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் புதன்கிழமை (10.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த கடமையிலிருந்து கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசும், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசும் தவறியுள்ளது.தற்போது விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரியில் பல ஆண்டுகளாகவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் அதற்கு பதிலாக கடல் நீர் நகரப் பகுதிகளில் உட்புகுந்து வருகிறது. இதனால் உப்பு நீர் கலந்த குடிநீர் வருவதால் குடிக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த தண்ணீரில் குளித்தால் சர்ம கோளாறுகள், முடி கொட்டுதல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு கடுமையாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணமான நீர்நிலைகளாக இருந்த ஆறுகள், ஏரிகள், குளங்கள், மடுவுகள், ஓடைகள், மழை வெள்ள வடிகால் வாய்க்கால்கள் பெருமளவு இருந்த நிலையில் தற்போது மேற்கண்ட நீர்நிலைகளில் பல நீர்நிலைகள் இருந்த சுவடுகளே இல்லாமல் உள்ளது. மிஞ்சி இருக்கும் பல நீர்நிலைகள் பல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குறுகி வருகிறது. இப்படி நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதுடன் கழிவுநீரை கலக்க செய்து நிலத்தடி நீரை பாழாக்கி வருகிறார்கள். அதேநேரத்தில் சிற்றாறுகள் ஓடையாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்த நல்ல நீர்நிலைகள் கழிவுநீர் வாய்க்கால்களாக மாறி வருகிறது. இதை தடுக்க வேண்டிய அரசு துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க உகந்த குடிநீர் கிடைக்காமல் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.தண்ணீரில் இயற்கையாக கலந்துள்ள இரும்பு, மக்னீசியம், புளோரைடு, உப்பு, கால்சியம், சோடியம் உள்ளிட்ட திடப் பொருட்களின் டி.டி.எஸ் அளவு அதிக அளவில் உள்ளதை அரசு பொருட்படுத்தாதது மக்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.சாதாரணமாக குடிதண்ணீரில் திடப்பொருட்களின் தன்மை 500-க்கும் குறைவாக TDS அளவு இருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் வினியோகம் செய்யப்படும் எந்த பகுதியின் தண்ணீரை சோதனை செய்து பார்த்தாலும் 1000-லிருந்து சுமார் 3200 mg அளவு TDS உள்ளது. இதனால் கிட்னி பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் உற்பத்தியாவது, சிறுநீரக பாதை அடைப்புகள், ரத்த சோகை, இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, எலும்பு அடர்த்தி குறைதல், பற்கல் உதிர்வது போன்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.நகரம் மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதிகபடியாக மாசடைந்த குடிநீரை குடிநீர் பிரிவால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருவதால் அதனை குடித்த 40-க்கும் மேற்பட்ட சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மக்கள் வாய்ந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், காய்ச்சல் மற்றும் பல உடல்உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக உப்பளம் தொகுதியில் நேத்தாஜிநகர், ஆட்டுபட்டி, ரோடியர்பேட், வாணரப்பேட்டை, ஜெயமுத்துமாரியம்மன் நகர், தாவீதுபேட்டை, ராசுஉடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம் உள்ளிட்ட உப்பளம் தொகுதி முழுவதும் தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.புதுச்சேரி நீரின் தன்மை பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கோலிபார்ம் பாக்டீரியா பன்மடங்கு அதிகரித்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியதன் பேரில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட காரணத்தால் புதுச்சேரி மாசு கட்டுபாடு வாரியம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் நகரப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டதில் 100ml நீரில், 100 mpn அளவுக்கு மல கோலிபார்ம் பாக்டீரியா இருக்கலாம் என்றும், ஆனால் அந்த 100ml நீரில், 1600 mpn அளவு மல கோலிபார்ம் பாக்டீரியா இருப்பது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி ஆளும் அரசுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை காட்டி வருகின்றனர்.அதேநேரத்தில் மலம் கலந்த கழிவுநீர் நேரிடையாக கடலில் சென்று கலப்பதால் கடல்வாழ் உயிரினங்களான மீன், இறால், நண்டு போன்றவை பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதை உணவாக உண்ணும் பொதுமக்களுக்கு கோலிபார்ம் பாக்டீரியாக்களின் தாக்கத்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வாந்தி, பேதி ஏற்படுவதுடன் காய்ச்சல் மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று தெரியவருகிறது.மேலும் முத்திரையர்பாளையம் பகுதிகளில் இருந்து நகரபகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அதிக மாசு அடைந்துள்ளதாக தெரிகிறது. அதை பொதுப்பணித்துறையினர் கவனத்தில் கொள்ளாமல் அப்படியே வினியோகம் செய்வதால் நகரப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றது. அப்படியிருந்தும் இதை பொருட்படுத்தாத சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களின் உயிருடன் விளையாடி கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது.சின்னம் சிறு மாநிலமான புதுச்சேரியில் எந்தவொரு திட்டமிடுதலும் இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய ரசாயன நிறுவனங்கள், மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள், ஸ்டீல் தொழிற்சாலைகள், கெமிக்கல் நிறுவனங்கள், குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பாட்டில், கேன்களில் குடி தண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டு இன்றைக்கு கடற்கரையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்திடியில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. நிலத்தடி நீர் முழுமையாக கடல் நீரால் மாசுபட்டுள்ளதை தடுக்க அரசிடம் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இல்லை.மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியில் நிலத்தடி நீரை பாதுகாக்க கட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் மழை நீரை பூமியில் குழாய் மூலம் சேகரிக்க உத்தரவிட்டார். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. அதே போன்று மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆட்சியிலும் மராமத்து பணிகள் என்ற பெயரில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்திடி நீர் மட்டம் உயர்த்தப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் நிலத்தடி நீர் உயர எந்த திட்டமும் அரசால் செயல்படுத்துவதில்லை.புதுச்சேரி மாநிலத்தில் எதிர்கால சந்ததியினருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட வேண்டும். தற்போது உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பை செயல்படுத்தி நிலத்தடியில் மழை நீரை செலுத்த வேண்டும். மேலும் மாநிலத்தில் அனுமதி பெறப்படும் அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சம் எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் அனுமதியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சாமல் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து தண்ணீரை உபயோகப்படுத்தும் நிறுவனங்கள் செயல்பட அரசு உத்தரவிட வேண்டும்.சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தமளிக்க கூடிய நிகழ்வாகும். இதுபோன்ற அசாதாரனமான நிகழ்வை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரும், மாண்புமிகு முதலமைச்சரும் நேரடியாக தலையிட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அசுத்தமான குடிநீர் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.
