வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய யு.பி.எஸ். ஓய்வூதியத் திட்டம்: வி.ஆர்.எஸ். எடுத்தால் உடனடி பென்ஷன்?
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய யு.பி.எஸ். ஓய்வூதியத் திட்டம்: வி.ஆர்.எஸ். எடுத்தால் உடனடி பென்ஷன்?
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொ ண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதுதான் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS). தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக, சுமார் 24 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இது ஊழியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறாமல், பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகியும், வெறும் 1% ஊழியர்கள் மட்டுமே இதில் இணைந்துள்ளனர். ஏன் இந்த நிலை?புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) மீது ஊழியர்களுக்கு அதிருப்தி ஏற்பட முக்கிய காரணம், தாமாக முன்வந்து ஓய்வு (VRS) பெறும் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்தான். ஒரு ஊழியர் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் உடனடியாகக் கிடைக்காது. மாறாக, அவர் ஓய்வு பெறும் வயதான 60-ஐ அடையும் வரை காத்திருக்க வேண்டும்.இது குறித்து அரசு ஊழியர் தேசியக் கூட்டமைப்பு (GENC) ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை செயலாளரிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தியது. விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, பல ஆண்டுகள் ஓய்வூதியம் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த அதிருப்திக்குத் தீர்வு காணும் வகையில், அரசாங்கம் ஒரு தெளிவான அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனச் செயலர் உறுதியளித்துள்ளார்.புதிய திட்டத்தில் என்னதான் இருக்கிறது?மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி வருகின்றன. இந்த கோரிக்கைகளுக்கு மத்தியில், மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றின் அம்சங்களை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. ஆயுதப்படை வீரர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தப் புதிய திட்டம் ஊழியர்களை ஈர்க்கும் வகையில் சில மாற்றங்களையும் செய்துள்ளது. அதன்படி, ஒரு ஊழியர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான ஒருமுறை வாய்ப்பு (one-time switch) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முடிவை ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது விருப்ப ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்போ எடுக்க வேண்டும்.காலக்கெடு நீட்டிப்பு!ஊழியர்களின் குறைந்த பங்கேற்பைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூன் 30, 2025 ஆக இருந்த காலக்கெடு, தற்போது செப்டம்பர் 30, 2025 வரை 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் பலருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் ஏற்படும் நிதி நெருக்கடி, ஊழியர்களின் பங்களிப்பு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான சேவை ஆண்டுகள் போன்ற பல அம்சங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே இந்தத் திட்டம் ஊழியர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அரசு இந்தச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு கண்டால் மட்டுமே, இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
