இந்தியா
தரமான குடிநீர் இல்லை; கொள்ளைய அடிப்பதிலே கவனம்: நாராயணசாமி விமர்சனம்
தரமான குடிநீர் இல்லை; கொள்ளைய அடிப்பதிலே கவனம்: நாராயணசாமி விமர்சனம்
புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 2021-ம் ஆண்டு மக்கள் மத்தியில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்களோ ஒரு வாக்குறுதியை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. இந்த ஊழல் ஆட்சியால் புதுச்சேரி மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. பா.ஜ.க-வில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். காங்கிரஸிலிருந்து விலகி தனது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள சென்ற ஓடுகாளிகள் மட்டுமே இருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுத்தமான தரமான குடிநீர் வழங்காததால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பல்வேறு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுத்தமான குடிநீர் கூட கொடுக்க முடியாத அந்த அரசு தேவையா? முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கொள்ளை அடிப்பதிலேயே அமைச்சரும் முதல்வரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. கொலை கொள்ளை நடக்கிறது. ஆனால் இதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. அரிசி வழங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழல் முறைகேடுகள் கவர்னர் வரை சென்று, கவர்னர் முதலமைச்சருடன் இருக்கும் புரோக்கர்களை அழைத்து விசாரித்தார். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 4500 பேருக்கு வேலை வழங்கினோம். ஆனால், வெறும் 1400 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் பேருக்கு பணி வழங்கியதை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.
