விளையாட்டு
‘அது உண்மை என்றால் நான் இனி கபடி ஆட மாட்டேன்’: மவுனம் கலைத்த தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத்
‘அது உண்மை என்றால் நான் இனி கபடி ஆட மாட்டேன்’: மவுனம் கலைத்த தமிழ் தலைவாஸ் கேப்டன் பவன் செஹ்ராவத்
தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய கபடி அணியின் கேப்டனுமான பவன் செஹராவத், ப்ரோ கபடி லீக் (PKL) சீசன் 12-ன் நடுவில் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஒழுங்கீன காரணங்களுக்காக அவர் அனுப்பப்பட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள செஹராவத், அது உண்மையென நிரூபிக்கப்பட்டால் கபடி விளையாடுவதையே நிறுத்திவிடுவேன் என்று சவால் விடுத்துள்ளார்.அணி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை:தமிழ் தலைவாஸ் அணி, தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில், “ஒழுங்கு சார்ந்த காரணங்களுக்காக, இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பவன் செஹராவத் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அணியின் நடத்தை விதிகளின்படி, உரிய பரிசீலனைக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று பதிவிட்டது. இருப்பினும், அவர் செய்ததாகக் கூறப்படும் ஒழுங்கீனச் செயல் குறித்த எந்தவொரு விவரத்தையும் அணி நிர்வாகம் வெளியிடவில்லை.பவன் செஹராவத்தின் பதில்:அணி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே, பவன் செஹராவத் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். தற்போது அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “அணி நிர்வாகம் என்மீது ஒழுங்கீன குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. நான் இந்திய அணியில் இருந்தவன். ஒழுக்கம் என்றால் என்னவென்று எனக்கு நன்கு தெரியும். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒரு சதவிகிதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டாலும், நான் மீண்டும் கபடி விளையாட மாட்டேன்,” என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், “நேற்றைய பதிவுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் அழைத்துப் பேசியதற்கும், செய்தி அனுப்பியதற்கும் நன்றி. நான் சீசன் 9-ல் இதே அணியில் இருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. எனது தம்பி அர்ஜுனும் நானும் அணியை முன்னேற்ற பல திட்டங்கள் தீட்டினோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட தனிநபர் காரணமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை,” என்றும் குறிப்பிட்டார்.இந்திய ஜெர்சி அணிந்திருந்த அவர், “நான் இந்திய அணியின் அங்கமாக இருந்தவன். ஒழுக்கம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒரு சதவிகிதம் உண்மை என்றாலும், கபடி விளையாடுவதை நிறுத்தி விடுவேன். நான் எங்கும் தவறு செய்யவில்லை, சரியான வழியில்தான் இருக்கிறேன்,” என்று மீண்டும் வலியுறுத்தினார். “தமிழ் தலைவாஸ் அணிக்கு எனது செய்தி என்னவென்றால், நீங்கள் நன்றாக விளையாடுங்கள். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள். எனது வாழ்த்துகள்,” என்று அந்த வீடியோவை நிறைவு செய்தார்.தமிழ் தலைவாஸ் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு:’ஹை-ஃப்ளையர்’ என செல்லப்பெயர் கொண்ட பவன் செஹராவத், அணியின் மிகவும் முக்கியமான வீரர். கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் இருந்த அவரை ரூ. 59.5 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த தமிழ் தலைவாஸ், அவரைச் சுற்றியே இந்த சீசனுக்கான அணியை கட்டமைக்க திட்டமிட்டிருந்தது.அவரது இந்த திடீர் விலகல், அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. தலைவர் மட்டுமன்றி, லீக்கின் தலைசிறந்த ரைடர்களில் ஒருவரான செஹராவத் இல்லாமல் இருப்பது, அணியின் வெற்றி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். இந்திய கபடி அணியின் கேப்டன் மற்றும் அடையாளமாக இருக்கும் செஹராவத், இந்த சர்ச்சையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளார். அவரது எதிர்காலம் மற்றும் தமிழ் தலைவாஸ் அணியின் இந்த சீசன் குறித்த பதற்றத்தை கபடி ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.
