Connect with us

விளையாட்டு

பவன் செஹ்ராவத்தை மீண்டும் அணியில் சேருங்க: முன்னாள் பயிற்சியாளர் வலியுறுத்தல்

Published

on

Pawan Sehrawat former coach Randhir Sehrawat urges PKL to reinstate Tamil Thalaivas Tamil News

Loading

பவன் செஹ்ராவத்தை மீண்டும் அணியில் சேருங்க: முன்னாள் பயிற்சியாளர் வலியுறுத்தல்

12 அணிகள் அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் ஆகஸ்ட் 29 முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் முதல் கட்ட போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் உள் அரங்க மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் இரவு 9 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 தொடர் தோல்வியில் இருந்து மீண்டுள்ள தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்து வெற்றியைப் பெற ஆவல் கொண்டுள்ளது. இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நடவடிக்கை இந்நிலையில், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் செஹ்ராவத் நியமிக்கப்பட்டார். முதல் 3 போட்டிகளில் அவர் அணியை வழிநடத்திச் சென்ற சூழலில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள போட்டிகளில் அவர் ஆடமாட்டார் எனக் குறிப்பிட்டும் அவரை அணியில் நீக்குவதாக தமிழ் தலைவாஸ் அறிவித்தது. “ஒழுங்கு காரணங்களுக்காக பவன் செஹ்ராவத் மீதமுள்ள சீசனுக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது உரிய பரிசீலனைக்குப் பிறகும், அணியின் நடத்தை விதிகளுக்கு இணங்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும்” என்றும் தமிழ் தலைவாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. மறுப்பு இதையடுத்து, தமிழ் தலைவாஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை வெளியான சில மணி நேரத்திலே அதனை நிராகரித்தார் பவன் செஹ்ராவத். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “அணி நிர்வாகம் என் மீது ஒழுங்கீன குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. நான் இந்திய அணியில் இருந்தவன். ஒழுக்கம் என்றால் என்னவென்று எனக்கு நன்கு தெரியும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒரு சதவிகிதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டாலும், நான் மீண்டும் கபடி விளையாட மாட்டேன். நேற்றைய பதிவுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் அழைத்துப் பேசியதற்கும், செய்தி அனுப்பியதற்கும் நன்றி. நான் சீசன் 9-ல் இதே அணியில் இருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. எனது தம்பி அர்ஜுனும் நானும் அணியை முன்னேற்ற பல திட்டங்கள் தீட்டினோம். ஆனால், ஒரு குறிப்பிட்ட தனிநபர் காரணமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணிக்கு எனது செய்தி என்னவென்றால், நீங்கள் நன்றாக விளையாடுங்கள். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள். எனது வாழ்த்துகள்” என்று அதில் கூறியிருந்தார். ஆதரவு தமிழ் தலைவாஸ் பவன் செஹ்ராவத்தை தங்களது அணியில் இருந்து திடீரென நீக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவரது நீக்கம் தொடர்பாக பரபரப்பான விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பவன் செஹ்ராவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் அவரின் முன்னாள் பயிற்சியாளர் ரந்தீர் செஹ்ராவத். பவன் செஹ்ராவத் மீதான நியாயமற்ற நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்திருக்கும் அவர், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ரந்தீர் செஹ்ராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, எனது மாணவன் பவன் செஹ்ராவத்துக்கு நடந்த சம்பவம் மிகவும் தவறான ஒன்று. அவர் தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் பவன் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். ஒருவர் ஏதாவது சொல்வதால், அது ஒருவரை ‘ஒழுக்கமற்றவர்’ ஆக்காது. நான் அவருக்கு என் சொந்தக் குழந்தையைப் போல கற்றுக் கொடுத்திருக்கிறேன், அவர் எப்போதும் ஒழுக்கமாக இருப்பவர் என்பது எனக்குத் தெரியும். உதாரணமாக, ஒரு வருடம் முன்பு, அவர் ஒரு தவறு செய்தார், நான் அவரை அறைந்தேன். அந்த நேரத்தில், அவர் என் கண்களைக் கூட பார்க்கவில்லை. அவர் கண்களைத் தாழ்த்திக் கொண்டு நின்றார். எனக்கு அவரை 10-12 வருடங்களாகத் தெரியும், அவர் குழந்தையாக இருந்தபோது என்னிடம் வந்தார். அப்படிப்பட்ட ஒருவர் ஒழுக்கமற்றவராக இருக்க முடியாது. சரி, இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அர்ஜுனா விருது பெற்றவரின் எதிர்காலத்துடன் யார் விளையாடுகிறார்கள்? புரோ கபடியை அவதூறு செய்யாதீர்கள். இந்த விளையாட்டு மக்களின் வியர்வை மற்றும் ரத்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. புரோ கபடி பல வீரர்களுக்கு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. A post shared by Randhir Singh Sehrawat (@randhir_sehrawat)அதனால், அத்தகைய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒருவரின் வார்த்தைகள் ஒரு வீரரின் முழு எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது. பவனுக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை உள்ளது. அவரால் இன்னும் 3-4 ஆண்டுகள் எளிதாக விளையாட முடியும். பவனின் வழிகாட்டியாக, சீசன் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், பவனுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன