இந்தியா
கர்நாடகா எஸ்.பி.ஐ. வங்கியில் துணிகரம்: ராணுவ உடையில் வந்து ரூ. 1.04 கோடி பணம், 20 கிலோ தங்கம் கொள்ளை
கர்நாடகா எஸ்.பி.ஐ. வங்கியில் துணிகரம்: ராணுவ உடையில் வந்து ரூ. 1.04 கோடி பணம், 20 கிலோ தங்கம் கொள்ளை
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஸ்டேட் வங்கி கிளையில், ராணுவ உடையில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். விஜயபுரா போலீசாரின் தகவலின்படி, சட்சனா நகரிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, வங்கி மேலாளர், காசாளர் மற்றும் பிற ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு இந்த குற்றத்தைச் செய்துள்ளனர். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மூடப்பட்ட நேரமான மாலை 6.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்ததாகவும், அப்போது பாதுகாப்பு ஊழியர் விடுப்பில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.விஜயபுரா மாவட்டத்தில் நான்கு மாதங்களில் நடந்த இரண்டாவது வங்கி கொள்ளைச் சம்பவம் இதுவாகும். முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), கொள்ளையர்கள் வங்கியிலிருந்து ரூ.1.04 கோடி ரொக்கத்தையும், ரூ.20 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர். மூவர் வங்கிக்குள் இருந்ததாகவும், மேலும் இருவர் வெளியே இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.வங்கிக்குள் சில துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவம் நடந்தபோது, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க சில மக்கள் வெளியே காத்திருந்தனர். “திருட்டு குறித்து தகவல் கிடைத்தவுடன் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். மூத்த வங்கி அதிகாரிகள் வந்த பின்னரே திருடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் சரியான தொகை தெரியவரும்” என்று விஜயபுரா காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஷ்மண் பி நிம்பர்கி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.முதல் தகவல் அறிக்கையின்படி, கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, முகமூடி, தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வங்கி மேலாளர் தாரகேஸ்வரின் அறைக்குள் நுழைந்துள்ளார். அவர் நடப்புக் கணக்கு திறப்பதற்கான படிவத்தைக் கொண்டு வந்ததாகவும், அதில் தவறான தகவல்கள் இருந்ததால் அதை திருத்தும்படி தான் கூறியதாகவும் மேலாளர் தெரிவித்துள்ளார்.”இதற்கிடையில், நானும் எனது சக ஊழியர் மஹந்தேஷும் அன்றைய கணக்கைக் முடிக்க ஸ்ட்ராங் ரூம் பகுதிக்குச் சென்றோம். அந்த நபர் எங்களைப் பின் தொடர்ந்து வந்து, துப்பாக்கி முனையில், ‘பணத்தை எடு இல்லையென்றால் உங்களைக் கொன்றுவிடுவேன்’ என்று இந்தியில் மிரட்டினார். மேலும் பல கொள்ளையர்கள் உள்ளே வந்து தங்கள் கைகளையும் கால்களையும் கட்டியதாகவும் தாரகேஸ்வர் தெரிவித்தார்.சில வாடிக்கையாளர்களையும் கொள்ளையர்கள் கட்டிப்போட்டதாகவும், பின்னர் கொள்ளையடித்த பொருட்களைப் பைகளில் நிரப்பி, வங்கியை வெளியில் பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். இந்தக் குற்றம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.குற்றவாளிகள் மகாராஷ்டிராவை நோக்கி ஹுலஜந்தி பாதை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர், இது மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது, மேலும் இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட தப்பிக்கும் உத்தியாகும்.இதேபோன்ற ஒரு கொள்ளைச் சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது. அப்போது, பிஜாப்பூர் மாவட்டத்தின் மாகுலி கிராமத்தில் உள்ள கனரா வங்கி லாக்கரில் இருந்து ரூ.5.20 லட்சம் ரொக்கமும், ரூ.53.26 கோடி மதிப்பிலான 58.97 கிலோ தங்க நகைகளும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 15 சந்தேக நபர்களை கைது செய்தனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
