விளையாட்டு
ஆதிக்கத்தை தொடருமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்
ஆதிக்கத்தை தொடருமா தமிழ் தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்அரங்க மைதானத்தில் நடைபெறும் 42-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அர்ஜுன் தேஷ்வால் தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 3-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விஜய் மாலிக் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் 8 போட்டிகளில் 3-ல் வெற்றி, 5-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்க தெலுங்கு டைட்டன்ஸ் திட்டமிட்டுள்ளது. தவிர, அந்த அணி கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடும். அதேநேரத்தில், கடைசி 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அதே உத்வேகத்துடன் ஆடவே நினைக்கும். எனவே, இந்த இரு அணிகள் ஆடும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
