வணிகம்
ஐ.டி.ஆர். ரீஃபண்ட் தாமதம்: அரசுக்கு ₹50,000 கோடி லாபம்!
ஐ.டி.ஆர். ரீஃபண்ட் தாமதம்: அரசுக்கு ₹50,000 கோடி லாபம்!
மத்திய அரசின் நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டில் (2025-26) சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிதி நிலை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம், நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட முன்கூட்டிய வரிகளும், வரித் தொகையைத் திரும்ப வழங்குவதில் உள்ள தாமதமும் தான். செப்டம்பர் 17, 2025 நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 9.18% அதிகரித்து, ரூ.10.82 லட்சம் கோடியாக உள்ளது.வரித் தொகைத் திரும்ப வழங்குவதில் 24% சரிவு! ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 17, 2025 வரையிலான காலத்தில், வருமான வரித் துறையானது ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே வருமான வரித் தொகையைத் திரும்ப வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.2.1 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 24% சரிவாகும். இந்த திடீர் குறைவு, சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வரி செலுத்துவோர் பலரும் தங்களது ஐடிஆர் (ITR) தொகை எப்போது கிடைக்கும் என கவலை தெரிவித்து வருகின்றனர்.பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பு! பெரு நிறுவனங்கள் செலுத்திய வரிகள் தொடர்ந்து வலுவாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்கூட்டிய வரி வசூல் 6.11% உயர்ந்து ரூ.3.52 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நிகர கார்ப்பரேட் வரி வசூல் ரூ.4.72 லட்சம் கோடியாக உள்ளது.இதேபோல், தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) செலுத்திய வரிகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இவர்களிடமிருந்து பெறப்பட்ட வரி வசூல் ரூ.5.84 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.பங்குச் சந்தை வரிகள் (STT) நிலவரம்! பங்குச் சந்தையிலிருந்து கிடைக்கும் பத்திரங்கள் பரிவர்த்தனை வரி (STT) வசூல் ஏறக்குறைய மாறாமல் உள்ளது. இந்த ஆண்டு ரூ.26,306 கோடியாகவும், கடந்த ஆண்டு ரூ.26,154 கோடியாகவும் இருந்துள்ளது. இதில் பெரிய மாற்றம் இல்லை.வரி வசூல் இலக்கு மற்றும் நிபுணர்களின் கருத்து! மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூலை ரூ.25.20 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகம்.டாக்ஸ் கனெக்ட் அட்வைசரி சர்வீசஸ் LLP-யின் பங்குதாரர் விவேக் ஜலன் இது குறித்து கூறுகையில், “வருமான வரித் துறையின் புதிய கொள்கைகளும், விதிமுறைகளும் தான் இந்த வரி வசூல் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தனிநபர் வரிகள் குறைக்கப்பட்ட போதிலும், ரிஃபண்ட் தொகைகள் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதால், தனிநபர்களுக்கான ஐடிஆர் ரீஃபண்ட் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்துள்ளது” என்கிறார்.வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், பல கோடி வரி செலுத்துவோர் தங்களின் வங்கிக் கணக்கில் பணம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துள்ளனர். அவர்களின் ஐடிஆர் நிலை ‘செயலாக்கப்பட்ட’ (processed) என்று காட்டினாலும், பணம் வரவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அரசின் வரி வசூல் இலக்கை அடையும் நோக்கம், வரித் தொகையைத் திரும்ப வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
