Connect with us

இந்தியா

சர்வாதிகார போக்கில் புதுச்சேரி சட்டப்பேரவை: எதிர்க் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Published

on

Puducherry Assembly dictatorial path Modi running Parliament Opposition Leader R Siva alleges Tamil News

Loading

சர்வாதிகார போக்கில் புதுச்சேரி சட்டப்பேரவை: எதிர்க் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  ஒன்றியத்தில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை எதிர்க்கட்சிகளை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு எவ்வித விபரமும் இன்றி நிறைவேற்றி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இச்சட்டங்கள் எவ்வித விவாதத்திற்கும் உட்படாமல் நிறைவேற்றப்படுவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயலாகும். இது போன்ற செயலை இன்று புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பின்பற்ற துவங்கிவிட்டது என்பது நடந்த சட்டமன்ற நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்பதால் மேலும் சில நாட்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்காத பாஜக–வின் பேரவைத் தலைவர் அவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களையும், சட்டங்களையும் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றியுள்ளார். புதுச்சேரியில் இந்த அரசு அமைந்ததில் இருந்து தொழிற்கொள்கையை கொண்டுவந்து தொழில் முனைவோரை ஈர்த்து புதிய தொழில்கள் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரி வந்துள்ளோம். அதனை செவி சாய்க்காத இந்த அரசு நான்கரை ஆண்டுகள் குறட்டை விட்டு தூங்கி விட்டு இந்த கடைசி காலத்தில் தடையில்லா ஆணை வழங்காத அரசு அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதாக சட்டம் கொண்டு வருவது மக்களை திசை திருப்பவே ஆகும். ஒற்றைச் சாளர முறை முன்னமே செயல்பாட்டிலிருந்தும் அதனை செயல்படுத்தத் திறமையற்ற அரசாக இது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அச்சட்டத்தில் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் பற்றி எதிர்க்கட்சிகளுடன் விவாதித்திருக்க வேண்டும். அதுபோல் தான் ஜிஎஸ்டி பாராட்டு தீர்மானம். ஜிஎஸ்டி–க்கான சீர்திருத்தம் மோடியின் தொலைநோக்கு பார்வை என்றும், நாட்டை, ஏழைகளை எதிர்காலத்தில் வளர்த்தெடுக்கும் சிறப்பான திட்டம் என்றும் புகழாரம் சூட்டப்படுவது தேவைதானா?. இதன் மூலம் பாஜக–வின் ஊதுகுழலாக புதுச்சேரி சட்டமன்றம் மாற்றப்பட்டு அதன் மாண்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்ட பிறகு அவர்கள் கொண்டு வந்த பல்வேறு மக்கள் விரோத திட்டங்களில் ஜிஎஸ்டி–யும் ஒன்று என்பதை புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல இந்திய நாடே அறியும். அரிசி, இட்லி முதற்கொண்டு குழந்தை உணவுகள் போன்ற பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கெல்லாம் 40 சதவீதம் வரை வரி விதித்து மக்களை பாஜக அரசு கசக்கிப் பிழிகிறது என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் குறை கூறிய போது, விதித்த வரியை குறைக்க முடியாது. இது ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரம் என்று தட்டிக் கழித்து மாதாமாதம் பல லட்சம் கோடிகளை வரியாக குவித்த ஒன்றிய அரசு இன்று திடீரென்று வரியை குறைப்பதாக கூறுவது எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டே ஆகும். இந்த அரசியல் ஆதாயத்தை பாராட்டும் அவலம் நமது புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது தலைகுனிவாகும். இத்துடன் தலைமை தணிக்கை குழுவின் 2023–24 ஆண்டுக்கான அறிக்கையும் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கடன் ரூ. 13,084 கோடியைத் தாண்டி உள்ளதாகவும், மின்துறையில் ரூ. 27 கோடி கையாடல் நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை எல்லாம் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் நடந்தேறியுள்ளன. இந்த அரசின் அநியாயங்கள், செயலின்மை, மக்கள் விரோத செயல்பாடுகள் பொதுமக்களை சென்றடையாமல் தடுக்கவே எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் திட்டமிட்டு வெளியேற்றி உள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரித்து பாராளுமன்றத்தை சர்வாதிகார போக்கில் மோடி நடத்துவது போல் புதுச்சேரி சட்டப்பேரவையை என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு நடத்தியதை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன