வணிகம்
இந்தியா- அமெரிக்கா: மீண்டும் இணையும் வர்த்தக உறவுகள்? பியூஷ் கோயல் வாஷிங்டன் பயணம்
இந்தியா- அமெரிக்கா: மீண்டும் இணையும் வர்த்தக உறவுகள்? பியூஷ் கோயல் வாஷிங்டன் பயணம்
வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான அதிகாரிகள் குழு அடுத்த வாரம் வாஷிங்டனுக்குச் சென்று வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளது. இதுகுறித்து, இரண்டு அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்தனர். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு, இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த வார தொடக்கத்தில் டெல்லிக்கு வருகை தந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) கூட்டங்களுக்கு இடையே வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெய்சங்கரின் அமெரிக்க பயணத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன, அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை அன்று, “அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் உதவியாளர் பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழு, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல செப்டம்பர் 16 அன்று வர்த்தக அமைச்சகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கலந்துரையாடல்கள் நேர்மறையாக இருந்தன, மேலும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது” என்று கூறினார்.செப்டம்பர் 16 அன்று, வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடைபெற்ற அதே நாளில், பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்குப் பதிலளித்த மோடி, இந்திய-அமெரிக்க கூட்டாண்மையை “புதிய உயரங்களுக்கு” கொண்டு செல்ல தான் “முழுமையாக உறுதியாக” இருப்பதாகத் தெரிவித்தார்.ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50 சதவிகிதமாக அமெரிக்கா வரிகளை இரட்டிப்பாக்கியதால் நிறுத்தப்பட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், வாஷிங்டனில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த வரிக் கட்டணங்களால் இந்தியாவின் தொழில்துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, துணிகள், காலணிகள் மற்றும் மீன்வளம் போன்ற துறைகளில் அமெரிக்காவிலிருந்து வரும் ஆர்டர்கள் குறைந்துள்ளன.ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவிகித கூடுதல் அமெரிக்க வரிகள் நவம்பர் 30-க்கு மேல் நீடிக்காது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.”வர்த்தகத் தடைகளை சரிசெய்ய இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்றும், இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்பதில் “சந்தேகம் இல்லை” என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து, வர்த்தக பதட்டங்கள் தணியத் தொடங்கியுள்ளன.இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த மோடி, இரு நாடுகளும் “இயற்கையான கூட்டாளிகள்” என்றும், “பிரகாசமான, செழிப்பான எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவார்கள்” என்றும் கூறினார்.ஆனால், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது அழுத்தம் கொடுக்குமாறு ஜி7 நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்குபவர்கள் மீது தடைகளை அதிகரிப்பதாக ஜி7 நாடுகள் “உறுதி அளித்துள்ளன” என்று அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
