இந்தியா
வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்; ‘காமராஜர் பெயரை உச்சரிக்கவே ரங்கசாமிக்கு அருகதை இல்லை’: நாராயணசாமி காட்டம்
வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்; ‘காமராஜர் பெயரை உச்சரிக்கவே ரங்கசாமிக்கு அருகதை இல்லை’: நாராயணசாமி காட்டம்
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பல முக்கியத்துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக மக்களை ஏமாற்றி வருகிறார். அதிகாரிகளை வேலை வாங்க வேண்டியது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கடமை ஆனால் அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்று சொல்வது இவர்களின் திறமை இல்லாததையே காட்டுகிறது. பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்றவர், நிர்வாக திறமை உள்ளவர், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மதுவிலக்கு கொண்டு வந்து அமல்படுத்தியவர் கல்வித்துறையை வளர்த்தவர் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர், ஆனால் வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்களை திறந்து விட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி என்று ரங்கசாமி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அவரது பெயரை உச்சரிக்கவே ரங்கசாமிக்கு அருகதை இல்லை. துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் அரசியல் செய்கிறார், பிஜேபி-யின் ஒரு அங்கமாகவே விளங்குகிறார், துணைநிலை ஆளுநர் மாளிகையை படிப்படியாக பாஜக அலுவலகமாக கைலாசநாதன் மாற்றி வருகிறார். துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் திறமைமிக்க அதிகாரி நிர்வாக திறமை மிக்கவர் இவரால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்று எண்ணி இருந்த நிலையில், மோடி பிறந்த நாளின் போது பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி மற்றும் முன்னாள் வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த மோடி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் எவ்வாறு கலந்து கொண்டார். இது சம்பந்தமாக ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும், தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் விதிமுறைகளை மீறி வருகிறது, முழு அரசியல் வாதியாக மாறிவிட்டார்,தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர தயாராக இருக்கிறார். கடற்கரை சாலையில் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு இல்லத்தில் கருத்தரங்கு கூடம், சினிமா தியேட்டர், நீச்சல் குளம் மற்றும் 26 அறைகள் உள்ளது, தற்போது ஆளுநர் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்து உள்ளார். சிறிய குடும்பம் உள்ள ஆளுநர் கைலாசநாதனுக்கு 26 அறைகள் உள்ள பல்நோக்கு இல்லம் எதற்கு? எந்த நோக்கத்திற்கு பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டப்பட்டதோ அந்த நோக்கம் மக்களுக்கு நிறைவேறவில்லை. கைலாசநாதன் எளிமையான ஆளுநராக இருந்தாலும் அவர் செயல்பாடுகள் எளிமையானதாக இல்லை” என்று அவர் விமர்சித்தார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
