இந்தியா
கடலூர்- புதுச்சேரி எல்லையில் சுங்கச்சாவடி: இரு மாநில மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும்- எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை
கடலூர்- புதுச்சேரி எல்லையில் சுங்கச்சாவடி: இரு மாநில மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும்- எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை
விழுப்புரம் – புதுச்சேரி – நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலையில், புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இரு மாநில மக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரைக்கால் தெற்கு தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பி.பி.ஆர். நேரு தெரிவித்துள்ளார்.ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்தபட்சம் 50 முதல் 60 கி.மீ தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சேலியமேட்டில் அமையவுள்ள சுங்கச்சாவடி, மதகடிப்பட்டியில் உள்ள கெங்காரம்பாளையம் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது.இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள், விவசாயிகள் ஆகியோர் அதிக சுங்கக் கட்டணத்தைச் செலுத்த நேரிடும். ஏற்கெனவே வாகனங்கள் வாங்கும்போதே சாலை வரிகளை செலுத்திவிட்ட நிலையில், மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றி வைப்பதாகும்.புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். அதன் நிலப்பரப்புகள் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ளன. புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைந்தால் இரு மாநில மக்களின் தடையற்ற போக்குவரத்து சுதந்திரம் பறிக்கப்படும்.போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை:புதுச்சேரி மாநில எல்லையிலிருந்து 10 முதல் 15 கி.மீ தூரத்திற்கு அப்பால்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்க வாய்ப்பில்லை. இந்த விதிகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, இரு மாநில மக்களின் போக்குவரத்து உரிமையை நிலைநாட்ட வேண்டும், என பி.பி.ஆர். நேரு என்று கோரிக்கை விடுத்தார்.பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
