இந்தியா
H-1B விசா கட்டண உயர்வு: இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை – நாஸ்காம்
H-1B விசா கட்டண உயர்வு: இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை – நாஸ்காம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்திய போதும், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு (IT) பெரிய பாதிப்பு இருக்காது என்று இந்தியாவின் ஐ.டி. கூட்டமைப்பான நாஸ்காம் (Nasscom) தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளூர் பணியமர்த்தல் மற்றும் திறன் மேம்பாட்டில் 1 பில்லியனுக்கும் அதிகமான டாலர் முதலீடு செய்வதால், இந்த முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என நாஸ்காம் கூறியுள்ளது.அமெரிக்க அதிகாரிகள் செப்டம்பர் 20 அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய கட்டண உயர்வு 2026 ஆம் ஆண்டு முதல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினர். மேலும், இது ஒருமுறை மட்டுமே வசூலிக்கப்படும் கட்டணம் எனவும், ஆண்டுதோறும் அல்ல எனவும் விளக்கமளித்தனர். இது, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.குறைந்து வரும் H-1B பயன்பாடுநாஸ்காம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக H-1B விசாக்களைச் சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைத்து, உள்ளூர் பணியமர்த்தலை அதிகரித்துள்ளன. இந்தியாவின் முன்னணி மற்றும் இந்தியா சார்ந்த நிறுவனங்களுக்கு 2015-ல் 14,792 ஆக இருந்த H-1B விசாக்கள், 2024-ல் 10,162 ஆக குறைந்துள்ளன. மேலும், முதல் 10 இந்திய நிறுவனங்களில் H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்கள், அந்த நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 1% க்கும் குறைவாகவே உள்ளனர். “இந்த நிலைமையைப் பார்க்கும்போது, இந்த கட்டண உயர்வால் எங்கள் துறைக்கு ஒரு சிறிய பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.திறன் நகர்வு அவசியம்அறிக்கையில் மேலும், “தேசத்தின் போட்டித்திறனைத் தக்கவைக்கவும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், திறமையான ஊழியர்களின் நகர்வுக்கான நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கைகள் தேவை” என்று நாஸ்காம் வலியுறுத்தியுள்ளது.முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அதில் H-1B விசாக்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு 100,000 டாலர் ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது இந்திய வல்லுநர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுவனங்களுக்கு மிகவும் கடினமாக்கும் என கருதப்பட்டது.H-1B விசாக்களின் மிகப்பெரிய பயனாளிகள் இந்தியர்கள்தான். அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை வழங்கப்பட்ட சுமார் 4 லட்சம் H-1B விசாக்களில் 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இதே காலகட்டத்தில், அமெரிக்காவில் உள்ள முன்னணி இந்திய ஐ.டி. நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் மற்றும் விப்ரோ ஆகியவை சுமார் 20,000 ஊழியர்களுக்கு H-1B விசாவிற்கான ஒப்புதலைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
