இலங்கை
சுதந்திர பலஸ்தீனத்தை அங்கீகரித்தது இலங்கை
சுதந்திர பலஸ்தீனத்தை அங்கீகரித்தது இலங்கை
ஐ.நா. பேரவையில் வைத்து ஜனாதிபதி அநுர அறிவிப்பு!
பலஸ்தீனத்தின் சுதந்திரத்தையும் – இறைமையையும் அதன் பிரிக்கமுடியாத உரிமையையும் இலங்கை அங்கீகரிக்கின்றது -இவ்வாறு ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள், பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்ததாவது:-
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும். யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கின்றோம். மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக்கொண்டு வருவதில் சர்வதேசம் பல தடவைகள் தோல்வியடைந்துள்ளது. பெரும்பாலும் பார்வையாளர்களாகவே இருந்துள்ளது. குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் எவருக்கும் உரிமையில்லை. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி உயிர்களைப் பாதுகாப்பதாகும்.
காஸாப் பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸாப் பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக்குரல்கள் நாலாபக்கமும் கேட்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவேண்டும்.
1967ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானமக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை நாம் விரும்பவில்லை. உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன என்றார்.
