இந்தியா
டிரம்ப் கோல்டு கார்டு: ரூ.8.3 கோடி பரிசுத் தொகை கொடுத்தால் உடனே அமெரிக்க குடியுரிமை!
டிரம்ப் கோல்டு கார்டு: ரூ.8.3 கோடி பரிசுத் தொகை கொடுத்தால் உடனே அமெரிக்க குடியுரிமை!
அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் ‘அமெரிக்கக் கனவு’க்கு புதிய சவாலும், வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்துள்ளன. ஒருபுறம், டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா கட்டணத்தை $1,00,000 (சுமார் ரூ.83 லட்சம்) ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது. மறுபுறம், இதற்குக் போட்டியாக, பணம் உள்ளவர்களுக்காகக் குடியுரிமைக்கு ‘கோல்டு கார்டு’ (Gold Card) திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்.19-ஆம் தேதி நிர்வாக உத்தரவு மூலம் கையெழுத்திடப்பட்ட இந்தத் திட்டம், இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.அமெரிக்க கருவூலத்திற்கு திரும்பப் பெற முடியாத $1 மில்லியன் (சுமார் ரூ.8.3 கோடி) “பரிசு” வழங்க வேண்டும் அல்லது பெருநிறுவனங்களின் (Corporate Sponsorship) மூலம் $2 மில்லியன் (சுமார் ரூ.16.6 கோடி) முதலீடு செய்யலாம். இது, வழக்கமான EB-5 முதலீட்டாளர் விசா போலல்லாமல், “அமெரிக்கத் தொழில் மற்றும் வணிகத்திற்கான பங்களிப்பாக” நிலைநிறுத்தப்பட்டுள்ளது.ஹெச்-1பி விசா கட்டணங்கள் திடீரென $100,000 ஆக உயர்ந்தது, இந்திய விண்ணப்பதாரர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுவே கோல்டு கார்டு திட்டத்தின் மீதுள்ள ஆர்வத்திற்குக் காரணம். குடியேற்ற ஆலோசனைகளான ஜினி கிரீன் கார்டு நிறுவனத்தின் சஹில் நியாதி, ஹெச்-1பி திருத்தங்களுக்குப் பின் ஆர்வம் தீவிரமாக உயர்ந்துள்ளது என்கிறார். பெரும்பாலான கேள்விகள், STEM (தொழில்நுட்பம்) பின்னணியை கொண்ட 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள மத்திய-பணிநிலை வல்லுநர்களிடமிருந்தே வருகின்றன.குடியேற்ற நிறுவனமான டேவிஸ் & அசோசியேட்ஸ்ஸின் சுகன்யா ராமன், “H-1B அல்லது EB-5 பற்றி முதலில் விசாரித்தவர்கள் மத்தியில், கோல்டு கார்டு பற்றிய உரையாடல்கள் இந்த வாரம் மட்டும் 40% அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். கோல்டு கார்டுக்கான விண்ணப்பங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், “ஏறக்குறைய 2,50,000 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்” என்று கூறியதாகச் சட்ட நிறுவனம் சிங்கானியா & கோ-வின் ரோஹித் ஜெயின் தெரிவித்தார். ஹெச்-1பி கட்டணம் உயர்ந்ததால், பெருநிறுவனங்களிடமிருந்து வரும் கேள்விகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஆனால், சட்ட வல்லுநர் ப்ராச்சி ஷா போன்ற சிலர், தென் ஆசிய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் மந்தமாகவே இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், $1 மில்லியன் தொகையைத் திரும்பப் பெற முடியாத உறுதிப்பாடாக வழங்க வேண்டும் என்ற அம்சம்தான் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த நிர்வாகம் ‘டிரம்ப் பிளாட்டினம் கார்டு’ என்ற கூடுதல் ப்ரீமியம் திட்டத்தையும் பரிசீலிக்கிறது. அதற்கு $5 மில்லியன் (சுமார் ₹41.5 கோடி) பங்களிப்பு தேவைப்படலாம். அமெரிக்க விசாக்களின் செலவுகள் அதிகரித்து வருவதால், வசதி படைத்த சில இந்தியர்கள் மாற்று நாடுகளைத் தேடத் தொடங்கியுள்ளனர் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
