இலங்கை
அநுரவின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது; திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!
அநுரவின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது; திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்கள் நாட்டுக்குப் பயனற்றவை. அவரது பயணங்களால் எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. அவர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கின்றார் என்றே கருதமுடிகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் சுமார் 8 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கின்றார். கடந்தவாரம் அமெரிக்கா சென்றிருந்த அவர் தற்போது ஜப்பான் சென்றுள்ளார். அவரது வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இலங்கை எதிர்கொண்டுள்ள பெரும் நெருக்கடியான தீர்வைவரி தொடர்பில் ட்ரம்புடன் பேச்சுகளை முன்னெடுப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க விஜயமும் நிறைவடைந்துள்ள நிலையில், ட்ரம்பை அவர் சந்தித்தாரா என்று எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை. ஜனாதிபதியின் ஜப்பான் பயணத்துக்கான நோக்கமும் என்ன எனத் தெரியாது- என்றார்.
