இலங்கை
காற்றாலைக்கு எதிராக அணிதிரண்டது மன்னார்
காற்றாலைக்கு எதிராக அணிதிரண்டது மன்னார்
ஆயிரக் கணக்கில் மக்கள் பங்கேற்பு..
போராட்டத்தில் பொலிஸாருடன் முறுகல்..
முழு அடைப்புப் போராட்டமும் வெற்றி..
கலகமடக்கும் பொலிஸார் களத்தில்..
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்துக்கு எதிராகவும், காற்றாலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும், ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நேற்று மிகப்பெரிய போராட்டமும், கடையடைப்பும் இடம்பெற்றன.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், நாடளாவிய ரீதியில் இருந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு, மன்னாரில் உள்ள அனேகமான வர்த்தக நிலையங்கள் நேற்றுப் பூட்டப்பட்டிருந்தன. அத்துடன், தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு கடற்றொழிலுக்குச் செல்லவில்லை. இதனால், முற்றுமுழுதான சேவை முடக்கம் மன்னாரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
கண்டனப் பேரணி
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து காலை 10 மணியளவில் கண்டனப் பேரணி ஆரம்பமானது. இந்தப் பேரணி,பொதுமருத்துவமனை வீதியூடாகச் சென்று, மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள். காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை ஏற்பட்டது.மாவட்டச் செயலர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதன்போது. ஜனாதிபதியிடம் அனுப்பி வைப்பதற்கான மனுவொன்று மாவட்டச் செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பேரணி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்றபோது, இரு தினங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து போராட்டக்காரர்கள் கூக்குரல் எழுப்பினார்கள். இதன்போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு கலகமடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதைத் தொடர்ந்து, அவ்விடத்துக்கு விரைந்த மதத்தலைவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. காற்றாலைத் திட்டம் தொடரும் பட்சத்தில், இந்தகைய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். அத்துடன், காற்றாலைக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக இடம்பெறும் வழக்கமான போராட்டம் இன்றும் தொடரவுள்ளது.
