இலங்கை
வெளிநாடுகளில் மறைந்துள்ள இன்னும் பலர் விரைவில் கைது
வெளிநாடுகளில் மறைந்துள்ள இன்னும் பலர் விரைவில் கைது
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 32 சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக் கொண்டுவரப்படுவர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ஓரிரு வாரங்களில் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலிருந்து இலங்கையில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
20 பேர் வெளிநாடுகளில் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் எந்தவொரு பிரஜையும் தாம் அறிந்த தகவல்களை எவ்வித பயமும் இன்றிப் பொலிஸாருக்குத் தெரிவிக்க முடியும். தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும்- என்றார்.
