இந்தியா
ஆஸ்கர் வரை சென்ற ஒரு உண்மைக் கதை! ‘ஹோம்பவுண்ட்’ பட நாயகன் சயூப் இன்று துபாயில் கூலித் தொழிலாளி: கண்ணீருடன் பகிரும் நினைவுகள்
ஆஸ்கர் வரை சென்ற ஒரு உண்மைக் கதை! ‘ஹோம்பவுண்ட்’ பட நாயகன் சயூப் இன்று துபாயில் கூலித் தொழிலாளி: கண்ணீருடன் பகிரும் நினைவுகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 முதல் அலையின்போது, தனது உற்ற நண்பன் அம்ரித் பிரசாத் இறக்கும் தருவாயில் அவன் தலையை மடியில் தாங்கி, ஈரத் துண்டால் உயிரைத் தக்கவைக்கப் போராடிய முகமது சையூப் சித்திக்-கின் (Mohammad Saiyub Siddiqui) புகைப்படம் இந்தியாவையே உலுக்கியது. அந்த நண்பர்களின் பாசப் போராட்டக் கதை வைரலாகி, இப்போது ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற பெயரில் திரைப்படமாகி, இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சையூப்பின் வாழ்க்கை மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளது.நண்பனை உயிரோடு வைத்திருக்கப் போராடிய சையூப், இப்போது மீண்டும் வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறி, துபாயில் கட்டுமானத் தளத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிகிறார்.நண்பனுக்காகப் படமான வாழ்க்கை – துபாயில் பார்த்த சையூப்!உத்தரப் பிரதேசத்தில் ஒரே கிராமத்தில் பிறந்து வளர்ந்த சையூப் மற்றும் அம்ரித்தின் நீண்ட பயணத்தின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம், கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் உள்ள திரையரங்கு ஒன்றில் சையூப் சித்திக் தனது நான்கு நண்பர்களுடன் சென்று இப்படத்தைப் பார்த்திருக்கிறார்.சூரத்திலிருந்து (குஜராத்) தனது கிராமமான உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலுள்ள பராஹுவா தேவரிக்கு சுமார் 1,500 கி.மீ தூரம் நண்பனுடன் மேற்கொண்ட அந்த மரணப் பயணத்தின் நினைவுகளை இந்தப் படம் கூர்மையாக நினைவுபடுத்தியது என 27 வயதான சையூப் உருக்கத்துடன் கூறுகிறார்.அம்ரித்தின் மரணம் குறித்து வைரலான கதை வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சையூப் மீண்டும் வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறினார். 2023 ஆம் ஆண்டு முதல், அவர் துபாயில் உள்ள வீட்டுக் கட்டுமான தளத்தில் ஒரு தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார்.”வாய்ப்பு கிடைத்தவுடன்” கிளம்பிவிட்டேன், என்கிறார் சையூப் துபாயில் இருந்து தொலைபேசியில். அங்கு அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேருடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்கிறார். அதில் இருவர் அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். “நான் ஒவ்வொரு மாதமும் சுமார் ₹12,000 முதல் ₹13,000 வரை வீட்டிற்கு அனுப்புகிறேன்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.நட்பின் ஆரம்பம்: பஸ்தி முதல் சூரத் வரைசையூப் மற்றும் அம்ரித் ஆகியோரின் வீடுகள் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பராஹுவா தேவரி கிராமத்தில் 600 மீட்டர் இடைவெளியில் இருந்தன. சிறுவயது நண்பர்களான இருவரும் அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தனர். அதன் பிறகு இருவரும் படிப்பை நிறுத்திவிட்டு, வெவ்வேறு திசைகளில் வேலை தேடிச் சென்றனர். பின்னர், அம்ரித் தனது நண்பன் சையூப்பைச் சூரத்துக்கு வரும்படி வற்புறுத்த, அங்கு இருவரும் குஜராத் நகரின் ஜவுளி ஆலைகளில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களாகப் பணியாற்றினர்.கோவிட் துயரம்: மரணப் பயணம்!மே 2020-இல், கோவிட்-19 ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆலைகள் மூடப்பட்டன. 22 வயதான அந்த நண்பர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். சுமார் 1,500 கி.மீ தொலைவுள்ள தங்கள் வீட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்த ஒரு ட்ரக்கில் பயணித்தனர். கோடை வெப்பத்தின் காரணமாக மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூரியை அடைந்தபோது, அம்ரித்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.சையூப் மருத்துவ உதவிக்காக வண்டியை நிறுத்தச் சொன்னபோது, வீட்டுக்குத் திரும்பும் அவசரத்தில் இருந்த ஓட்டுநரும் மற்ற பயணிகளும் எதிர்த்தனர். அதனால் சையூப், அம்ரித்தை அழைத்துக்கொண்டு வண்டியை விட்டு இறங்கினார்.வைரலான புகைப்படத்தில், சாலையோரத்தில் சையூப் (அப்போது 23 வயது), அம்ரித்தின் தலையைத் தன் மடியில் தாங்கி, ஈரமான கைக்குட்டையால் அவனைத் துடைத்து உயிரைக் காப்பாற்ற முயன்றது நெஞ்சை உலுக்கியது. உதவி செய்ய முயன்ற ஒரு வழிப்போக்கர் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அது அவர்களின் குடும்பத்தினரையும் சென்றடைய, அவர்கள் சையூப்பைத் தொடர்புகொள்ளத் தொடங்கினர்.ஆஸ்கர் அழைப்பு: ஒரு முஸ்லிம் – தலித் நட்பு!துரதிர்ஷ்டவசமாக, அம்ரித் இறுதியில் உயிரிழந்தான். சையூப் ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து, மே 17, 2020 அன்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு நண்பனின் உடலைக் கிராமத்திற்குக் கொண்டு சேர்த்தார்.“அம்ரித் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, திரைப்பட இயக்குநர் நீரஜ் கைய்வான் (Neeraj Ghaywan) தனது குழுவினருடன் எனது வீட்டிற்கு வந்து, எங்களைப் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புவதாகக் கூறினார்,” என்கிறார் சையூப். நீரஜ், எழுத்தாளர் பஷாரத் பீர் (Basharat Peer) ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை மூலம் இவர்களின் கதையை அறிந்துள்ளார்.“நாட்டில் நிலவும் எதிர்மறையான சூழலில், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தலித் இடையேயான நட்பைப் பற்றிய கதை முக்கியமானது என்று நீரஜ் கூறினார். அதைக் கேட்ட பிறகு, நான் சம்மதித்தேன்,” என்கிறார் சையூப். அதன் பிறகு, நீரஜ் கய்வானின் குழுவினர் சையூப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துள்ளனர்.கண்ணீரை வரவழைத்த காட்சிகள்!கடந்த புதன்கிழமை, இயக்குநர் நீரஜ் கைய்வான் தொலைபேசியில் அழைத்து, சையூப் மற்றும் அவரது நண்பர்களுக்கான சினிமா டிக்கெட்டுகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். “நாங்கள் மதியக் காட்சிக்குச் சென்றோம். படத்தைப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை திகைப்பூட்டும் நினைவுகள் பல என் மனதிற்கு வந்துபோனது,” என்கிறார் சையூப்.படத்தில் சில நாடகத்தனங்கள் இருந்தாலும் – உதாரணமாக, “நாங்கள் ஒருபோதும் போலீஸ் அதிகாரிகளாக விரும்பவில்லை” என்று சையூப் சிரிக்கிறார் – அம்ரித்துடன் தான் பகிர்ந்து கொண்ட பிணைப்பின் ஆழத்தை அவர் உடனடியாக உணர்ந்தார். “நீரஜ் மிகச் சிறப்பாகப் படம் எடுத்துள்ளார்” என்று சையூப் பாராட்டுகிறார்.திரும்பிப் பார்க்காத வாழ்க்கை!அம்ரித்தின் மரணத்திற்குப் பிறகு, சையூப்பால் நண்பன் இல்லாத அந்தச் சூரத்திற்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. மூன்று ஆண்டுகள், அவர் தனது குடும்பப் பண்ணையில் வேலை செய்தார். “ஆனால் நான் எப்போதும் துபாய்க்குச் சென்று, ஒரு சிறந்த வாழ்க்கைக்காகப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டிருந்தேன்,” என்கிறார் சையூப்.இப்போதைக்கு அவர் வீடு திரும்பப் போவதில்லை என்பதைச் சையூப் உணர்ந்துள்ளார். ஆனால், அவரின் ஒரே வருத்தம் என்னவென்றால்: தனது பழைய செல்போனில் அம்ரித்தின் பல புகைப்படங்கள் இருந்தன, ஆனால் அது பழுதடைந்தபோது பெரும்பாலானவற்றை இழந்ததுதான். காலத்தின் கோலம்!இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்!
