இந்தியா
காந்தி ஜெயந்தி விடுமுறை: புதுச்சேரியில் நாளை மது, இறைச்சி கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தி விடுமுறை: புதுச்சேரியில் நாளை மது, இறைச்சி கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) புதுச்சேரியில் மதுபானம் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் ஆகியோர் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சாராயம், கள் உள்ளிட்ட மதுக்கடைகள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் ஆகியவை நாளை, அதாவது அக்டோபர் 2ஆம் தேதி, கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறும் கடைகள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேபோல், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள இறைச்சி உள்ளிட்ட மாமிசங்கள் மற்றும் அதற்கான கருவிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு புனிதமான நாளாகக் கருதப்படுவதால், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் வகையிலும், அஹிம்சை நெறியைப் பின்பற்றும் வகையிலும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.செய்தி: பாபு ராஜேந்திரன்
